ஐஎஸ்-க்கு (ISIS) நிதி எங்கிருந்து வருகிறது?

ஐஎஸ்-க்கு எதிராக போர் புரிய ஐநா அமைப்பே அறிவுறுத்திய பின்பும் கூட உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐஎஸ்.க்கு வரும் பணத்தை முடக்குவது எப்படி என்பதாகவே இருக்கும்.

டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளிலிருந்து பாக்தாத் புறநகர்ப்பகுதி வரை தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ், உலகிலேயே பெரிய அளவுக்கு நிதியுதவி பெற்று வரும் பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களிடம் மத போலீஸ் துறை உள்ளது, இவர்கள் பள்ளிகள் நடத்தி வருகின்றனர், உணவு மையங்கள் மற்றும் பிற நிர்வாக மையங்களையும் ஐஎஸ் நடத்தி வருகிறது.

'தி இகானமிஸ்ட்' பத்திரிகையின் படி, ஐஎஸ் போர் படையினருக்கு மாதம் 400 டாலர்கள் அந்த அந்த அமைப்பு வழங்குகிறது. இராக்கிய அரசு தரப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் சம்பாதிக்கும் தொகையை விட இது அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதியுதவிகள்:

பொதுவாக பயங்கரவாத அமைப்புகள் சர்வதேச நிதியுதவி அளிப்போரின் தயவில் நடந்து கொண்டிருக்கிறது. ஐஎஸ்.க்கும் இதுதான் வழி. வாஷிங்டன் போஸ்ட் செய்தி அறிக்கையின் படி, 2013-14-ல் ஐஎஸ் அமைப்பு 40 மில்லியன் டாலர்கள் தொகையை சவுதி அரேபியா, கத்தார், குவைத், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் குடும்பத்தினரிடமிருந்து பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் குவைத்தில் ஐஎஸ் செல்லைச் சேர்ந்த 6 பேரை குவைத் கைது செய்தது. இவர்கள் ஐஎஸ்.க்கு ஆட்கள் தேர்வு செய்வது, மற்றும் நிதியுதவிகளைப் பெற்றுத்தருவதில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது உண்மையாக இருக்குமேயானால், வளைகுடா நாடுகளான சவுதி உள்ளிட்ட நாடுகளிடமிருந்தே ஐஎஸ்.க்கு அதிக பணம் செல்கிறது என்பது உறுதியாகி விடும்.

2013-ம் ஆண்டு கிழக்கு சிரியா நகரமான ரக்காவை ஐஎஸ் பிடித்ததிலிருந்து அது தனது நிதி நிலைமைகளையும் ராணுவத் திறன்களையும் விரிவு படுத்தியுள்ளது. ராண்ட் கார்ப்பரேஷனைப் பொறுத்தமட்டில், 2008-09-ல் மாதம் ஒன்றுக்கு 1 மில்லியன் டாலர்கள் என்பதிலிருந்து 2014-ம் ஆண்டு தினசரி அளவில் 1 மில்லியன் டாலர்கள் முதல் 3 மில்லியன் டாலர்கள் வரை நிதியுதவி பெறுவதாகத் தெரிகிறது. இதில் வரி வசூல் பெரும் பங்கு வகிக்கிறது.

சில தகவல்களின் படி சில்லறை விற்பனை கடைகளுக்கு மாத வரிவிதிப்பாக 2 டாலர் தொகையை ஐஎஸ் வசூலிக்கிறது. கட்டாய பணவசூல், அல்லது பணப்பறிப்பு முதல் வரிவிதிப்பு வரை ஐஎஸ்.க்கு 360 மில்லியன் டாலர்கள் அந்த அமைப்புக்கு கிடைப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மேலும், ஆட்கடத்தல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது. 2014-ம் ஆண்டில் மட்டும் ஆட்கடத்தல் மூலம் 20 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளதாக சில உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேலும் இராக்கில் வங்கிக் கொள்ளை மூலம் பெரும் தொகையை ஈட்டியுள்ளது.

இராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூலை ஐஎஸ் கைப்பற்றிய பிறகு நகரத்தின் மத்திய வங்கியை கொள்ளை அடித்து 429 மில்லியன் டாலர்கள் ஈட்டினர்.

ஆனால் இந்த ஐஎஸ். அமைப்பின் வருவாயைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய வர்த்தகம் என்னவெனில் கச்சா எண்ணெய் விற்பனையே. சிரியாவின் 10 கச்சா எண்ணெய் வயல்களில் 6 ஐஎஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கச்சா எண்ணெய் வருவாய்க்காக பெரிய வர்த்தக வலைப்பின்னலையே ஐஎஸ் உருவாக்கியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை ஒன்று கூறுகிறது.

அந்த அறிக்கையின் படி கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ஐஎஸ். பெறும் வருவாய் நாளொன்றுக்கு 1.5 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.