வரலாற்றில் முதல் தடவையாக அளிக்கம்பை பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள்

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் எல்லைக் கிராமமான அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் அளிக்கம்பை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (12) காலை பாடசாலையின் அதிபர் எஸ்.மணிவண்ணனின் தலைமையில் இடம்பெற்றன.

இவ்வருடம் முதல்முறையாக நடாத்தப்பட்ட குறித்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், விசேட அதிதியாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளனும், கௌரவ அதிதிகளாக அளிக்கம்பைப் பங்குத் தந்தையர்களான அருட்தந்தை தேவராஜ் பீரிஸ், அருட்தந்தை ரொஹான் பீரிஸ் ஆகியோருடன் கிராம உத்தியோகத்தர் கே.லோகநாதன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு அங்கு இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளை முழுமையாகக் கண்டுகளித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின் வெற்றிக் கிண்ணங்களுக்கான முழுமையான அனுசரணையைத் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் வழங்கியிருந்ததோடு, அதிபரின் வேண்டுகோளின் பேரில் குறித்த பாடசாலைக்கு அவசியத் தேவையாகவிருந்த ஒலிபெருக்கி சாதனங்களையும் அங்கே வழங்கிவைத்தார். அத்துடன் தையல் தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட கணவனை இழந்த பெண்கள் இருவருக்குத் தையல் இயந்திரங்களையும் இன்றைய நிகழ்வில் உதவியாக வழங்கிவைத்து அவ்விழாவை மேலும் சிறப்பித்திருந்தார்.

அங்கு தலைமையுரையாற்றிய அதிபர் எஸ்.மணிவண்ணன், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான அளிக்கம்பையில் அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை மனப்பாங்கினால் சிறப்பான முறையில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்ற எமது பாடசாலையில் வரலாறு படைத்துள்ள இப்போட்டி நிகழ்ச்சியை எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடாத்தமுடிந்தமை எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனத் தெரிவித்ததோடு அளிக்கம்பை கிராமத்தில் இதுகாலவரையில் எந்தவொரு அரசியல்வாதியாலும் செய்யமுடியாதிருந்த ஒரு பொது விளையாட்டு மைதானத்தின் தேவையை ஒரு தனிமனிதனாகப் போராடி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் இக்கிராமத்துக்குப் பெற்றுக்கொடுத்ததாகவும் குறிப்பிட்டதோடு, அவரது பெறுமதிமிக்க அந்த உதவியினாலேயே இவ்வாறானதொரு விளையாட்டுப்போட்டியைத் தம்மால் இன்று நடாத்தமுடிந்ததாகவும் கூறி பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்ததோடு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தொடர்பாகப் பேசுகையில், அவர் முன்பொருமுறை எமது பாடசாலைக்கு விஜயம் செய்தபோது ஒழுங்கான தளபாடங்கள் கூட இல்லாதநிலையில் சுமார் 275 மாணவர்கள் மிகுந்த சிரமத்தோடு கல்வி கற்பதையும் ஆசிரியர்கள் மாத வருமானத்துக்கு மேலதிகமாக அர்ப்பணிப்பான சிந்தனையோடு தமது கடமைகளை ஆற்றிவருகின்ற நிலையையும் தன் கண்களால் கண்டு அன்று மிகுந்த கவலையுற்றிருந்தார். அப்போது அவரிடம் எமது பாடசாலைக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகக் கதைத்திருந்தோம். பின்பு அவர் சுகவீனமடைந்துள்ளதாகக் கேள்வியுற்று மிகவும் கவலையடைந்தோம். ஆனால் முழுமையாகக் குணமடையாத நிலையிலும் எமது அழைப்பையேற்று இங்கு வருகைதந்து இன்று தான் சொன்ன வாக்கையும் காப்பாற்றியிருப்பதோடு தமது பாடசாலையை அவர் பெருமைப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், ஒருகாலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தப் பாடசாலையில் அன்று ஆரம்பக்கல்வி கற்ற மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் சென்று உயர்கல்வி கற்றிருந்தாலும் இன்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி இப்பாடசாலையின் பெயரையும் உலகறியச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டதோடு, நாளை ஆலையடிவேம்பு பிரதேசத்தின் செயலாளர் ஒருவர் அவர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டால் தான் இன்னும் பெருமையடைவேன் எனவும் குறிப்பிட்டார். மேலும் அளிக்கம்பைக் கிராமத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்துவரும் அருட்தந்தையர்களின் பணிகளையும் அங்கு பாராட்டிப் பேசினார்.

தொடர்ந்து குறித்த மைதானத்தில் சென் மேரி, சென் ஜோசப் என இரு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகளை அதிதிகள் பார்வையிட்டதுடன், போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர். அத்துடன் பெறப்பட்ட மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் இவ்வருடத்தின் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட சென் மேரி இல்லத்துக்கான வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கிவைத்திருந்தனர்.