நகர்ப்பகுதியில் காலையும், மாலையும் வீதிகளில் நடக்கும் நிலை

(படுவான் பாலகன்) ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் அவன் முழுமனிதனாக கணிக்கப்படுகின்றான் அவனது ஆயுளும் நீண்ட காலத்திற்கு இருக்ககூடியதாக இருக்கின்றது.  பாடசாலை மட்டத்தில் அந்நிலையை அடையத்தக்க வகையில் விளையாட்டின் மூலமாக மாணவர்களுக்கு உடற்பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை அளித்துக் கொண்டிருக்கின்றோம். உடற்பயிற்சி என்பது உடலும் உள்ளமும் ஒரே நிலையில் இருக்கத்தக்கதாக மாணவர்களை வழிப்படுத்தும் என்பது ஒரு உண்மையான விடயமாகும். இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால் பல்வேறு வகையான நஞ்சுப்பொருட்களை, நஞ்சுப்பதார்த்தம் கலந்த உணவுகளை உண்கின்றோம்., கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ இந்த உணவுகளை உண்ணவேண்டிய நிலையில்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த உடற்பயிற்சி என்பது முக்கியமான தேவையாக இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைய காலத்தில் நகர் புறங்களை பார்ப்போமாகவிருந்தால் காலையிலும், மாலையிலும் தொற்றா நோய்களுக்கு உட்பட்டவர்கள் வியாதியை குணப்படுத்தும் நோக்குடன் வீதியோரங்களில் நடந்து செல்வதை ஒவ்வொரு நாளும் அவதானிக்க முடிகின்றது. என கன்னன்குடா மகா வித்தியாலயத்தின அதிபர் புலேந்திரகுமார் குறிப்பிட்டார்.

கன்னன்குடா மகா வித்தியாலத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நேற்று(11) வியாழக்கிழமை இடம்பெற்றபோது அதில் தலைமையுரையாற்றும் போது மேலுள்ளவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்

பாடசாலையை பொறுத்தவரையில் இணைப்பாடவிதானம், பாடவிதானம் என்ற விடயங்கள் இதில் உள்ளடங்கியிருக்கின்றது. பாடவிதானம் எனும் போது அது கற்றல், கற்பித்தல் போன்றவையாக இருப்பதுடன் அவை வகுப்பறை மட்டத்தில் நடைபெறுகின்றன. இணைப்பாடவிதானம் எனும் போது தமிழ்மொழித்தினம், ஆங்கிலதினம், விளையாட்டு  என்பவற்றை குறிப்பிடலாம். இணைப்பாடவிதானத்தில் விளையாட்டுப் போட்டி என்பது மிக முக்கியமான விடயம் அவ்வகையில் கன்னன்குடா மகா வித்தியாலயம் கடந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டி தேசியமட்டம் வரை சென்றிருக்கின்றது. இணைப்பாடவிதானம், பாடவிதானம் போன்ற இரண்டு விடயங்களையும் சமமாக கொண்டு செல்லும் பாடசாலைகள்தான் சிறந்த பாடசாலைக்ளாக  கொள்ளப்படுகின்றது எனத்தெரிவித்தார்