காணாமல் போன களுவன்கேணி பாடசாலைச் சிறுவன் கொழும்பிலிருந்து மீட்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் .

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்திலிருந்து கடந்த 2 ஆம் திகதி காணாமல்போன 15 வயதுடைய பாடசாலைச் சிறுவனை கொழும்பிலுள்ள ஹொட்டேல் ஒன்றிலிருந்து மீட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதாக அவனது பெற்றோர் தெரிவித்தனர்.

இது விடயமாக ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டிருந்ததற்கமைவாக பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த சந்திரகுமார் சதீஸ்குமார் என்ற மாணவனே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணாமல் போயிருந்ததாகப் பெற்றோர் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த சிறுவனே வெறொரு தொலைபேசி இலக்கத்திலிருந்து அவனது பெரியப்பாவுடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பில் உள்ள ஒரு ஹொட்டேலில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாகவும் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு பாடசாலை அடையாள அட்டையை அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளான்.


அந்தத் தகவலின் பிரகாரம் உடனடியாக கொழும்பு சென்ற பெற்றோர் குறித்த ஹோட்டலில் சிறுவன் சிப்பந்தியாக வேலையில் அமர்த்தப்பட்டிருந்தபோது அவரைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சிறுவன் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.