தமிழ் மக்கள் ஆகிய எங்களுக்கு புதிய அரசியல் யாப்பு சட்டம் முக்கியமானது.

(க.விஜயரெத்தினம்)தென்னிலங்கை சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்கு முக்கியமோ அல்லது முக்கியமில்லையோ தமிழ் மக்கள் ஆகிய எங்களுக்கு புதிய அரசியல் யாப்பு சட்டம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புதிய ஒரு அரசியல் யாப்பு சட்டத்தை ஆக்குகின்ற முயற்சிக்கான அத்திவாரத்தினை நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதமரும் காத்திரமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.

இன்றும் முழுமையாக அந்த பிரேரணை முன்வைக்கப்படவில்லை. ஆனால் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நிகழ்விலே தமிழர்களின் தலைவிதி தற்போது எழுதப்படப்போகின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடி விவோகானந்தா மகளிர் மகாவித்தியாலய பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை

(09.02.2016) மட்/சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அதிபர், திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்:- தமிழர்களாகிய நாங்கள் தற்கால அரசியல் விடயங்களையும் அதன் அரசியல் தந்திரோபாயங்களையும் அறிந்துகொள்ளக்கூடியளவிற்கு இருக்கின்றோம். எம்முடைய நாட்டின் தென்னிலங்கை நகரிலோ, அல்லது பாராளுமன்றத்திலோ முக்கிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது சிங்கள பெரும்பான்மை இனத்திற்கு முக்கியமோ முக்கியமில்லையோ தமிழ் மக்களாகிய எங்களுக்கு காலத்தின் தேவையாக இருக்கின்றது.

புதிய ஒரு அரசியல் யாப்பு சட்டத்தை ஆக்குகின்ற முயற்சிக்கான அகரம் இடப்பட்டுள்ளது. இன்றும் முழுமையாக அந்த பிரேரணையை முன்வைக்கவில்லை. ஆனால் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்களின் தலைவிதி எழுதப்படப்போகின்றது என்கின்ற விடயத்தை மாணவர்களாகிய உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அது தொடர்பான அரசியல் நிலமைகளை தினமும் வெளியாகும் செய்திகள் ஊடாக அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் காலவரையிலே பாராளுமன்றத்தின் குழுவொன்று மக்களை சந்தித்து உங்களுக்கு எந்தவிதமான அமைப்புச்சட்டம் தேவையென்று கேட்கின்றபொழுது நீங்கள் எல்லோரும் ஒருமித்த குரலிலே உங்களுடைய பெற்றோர்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் எம்முடைய பிரதேசங்கள் தமிழ் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டு அங்கே சமஸ்டி அமைப்பிலான அரசியலும், உள்ளக சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்தக்கூடியதுமான உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய விதத்திலுமான அந்த அரசியல் யாப்பு ஆக்கப்பட வேண்டும் எனும் செய்திகளை உங்களுடைய பெற்றோர்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்பதை நான் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் ஆணையாளர் நாயகம் அவர்கள் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டார். அவர்களுடன் நாங்களும் சந்தித்தோம். சந்தித்தபொழுது அண்மையிலே இலங்கை அரசும் நிறைவேற்றிய மனித உரிமை ஸ்தாபனத்திலே அந்ததீர்மானத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனும் விடயத்தை மனித உரிமை ஆணையாளரிடம் கூறினோம். அவர் நடாத்திய பத்திரிகை மாநாட்டிலே தமிழர்களின் அபிலாசைகள், இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இராணுவ பிரசன்னங்கள் குறைக்கப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைக்கைதிகள் விடயத்தில் நல்ல தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் கூறியிருக்கின்றார். இதனிடையே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.
விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட கருத்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளரிடம் அவர் சொன்னதாக கூறியிருக்கும் கருத்தானது வேதனை தரும் விடயமாக அக்கருத்து தமிழ் மக்களுக்கு அமைந்திருக்கின்றது. அதாவது, அரசியல் சிறைக்கைதிகள் விசாரணைகளின் பின்புதான் விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் கருத்து சர்வதேசத்தின் கருத்து என கூறியிருக்கின்றார். சாதாரண
சட்டங்களின் அடிப்படையிலே அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டிருந்தால் அவருடைய கூற்று ஓரளவு நியாயமானதாகும் என சொல்லலாம். ஆனால் எங்களுடை அரசியல் கைதிகள் காட்டுமிராண்டித் தனமான பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டவர்கள். அந்த பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டுமென்று, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிலே முன்மொழியப்பட்ட பிரேரணையில் கூறப்பட்டிருக்கின்றது. எந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் இது சம்பந்தமாக தீர்மானம் எடுத்திருக்கின்றதோ அந்த சட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டவர்களை அந்த சட்டத்தினால் விசாரணை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய ஆணையாளர் அவர்கள் சொல்லிருக்கின்ற கருத்து தமிழ் மக்களை பொறுத்தமட்டில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை ஐ.நா. ஆணையாளர் நாயகம் நாட்டிற்கு திரும்பிய பின்பு இந்த விடயத்தில் பூரண தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. இந்த விடயத்திலே எங்களுடைய இந்த இளைஞர்கள் அரசியல் கைதிகளாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை எல்லோரும் பிரார்த்திப்போம். இப்போது இலங்கையிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்கள் ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறக்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் எனும் பழமொழியில் கேட்டிருக்கின்றோம். ஒற்றை ஆட்சி என்றால் தமிழ் மக்களுக்கு கோபம் வருகின்றது, சமஸ்டி ஆட்சி என்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு கோபம் வருகின்றது. இந்த இரண்டு நிலமைகளுக்குமிடையே மிகவும் பக்குவமாகவும், நிதானமாகவும் இந்த விடயங்களை கையாண்டு 30 ஆண்டு காலமாக எங்களுடைய வாழ்வு மிகவும் கோரமாக நசுக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் தமிழ் இனம், மிகவும் அநியாயமாக வதைக்கப்பட்டிருக்கின்றோம். உரிமைகள் கேட்டதற்காக இனிவரும் காலங்களிலே நாங்கள் புத்திகூர்வமாக நடந்து வரையப்படுகின்ற அரசியல் யாப்பு சாசனத்தில் எங்களுடைய உரிமைகளை மிகவும் உறுதியாக வெளியிட வேண்டும். அதற்காக எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.