வீழ்ந்தது கூகுள் பலூன்

கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில் பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட வெப்பவாயு பலூன் புசல்லாவ - களுகல்லவத்தை பகுதியில் நேற்றிரவு வீழ்ந்துள்ளது.


குறித்த பலூன் மற்றும் இணைய கருவிகள் புப்புரெஸ்ஸ காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை மற்றும் பலூனின் பயணப் பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக இவ்வாறு இணைய கருவிகளுடன் பலூன் தரையில் வீழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

´புரோஜெக்ட் லூன்´ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையிலேயே இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது.

அரசாங்கத்துடன் கூட்டு செயற்பாட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் முன்னோடி பணிகள் அண்மையில் இடம்பெற்றன.

இந்த பரிசோதனைகளின் போது மூன்று பலூன்களில் ஒன்று கடந்த திங்கட்கிழமை இலங்கை வான்பரப்பில் பிரவேசித்தது.

இந்த பரிசோதனை தென் அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல்கள், தொழிநுட்பதுறையின் தலைவர் முகுந்தன் கனகே தெரிவித்தார்.

மற்றைய இரண்டு ´புரோஜெக்ட் லூன்´ ஹீலியம் பலூன்களும் இந்தோனேசியா மற்றும் அவுஸ்ரேலிய வான்பரப்புகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.