Friday, February 05, 2016

நுண்கடன் திட்டமும் நிர்க்கதியாகும் மக்களும்

ads

கடந்த காலங்களில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் அன்றாட வாழ்க்கையினை கூலித்தொழில் மூலமும், சுயதொழில் மூலமும் நடாத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் மத்தியில் பாரிய பொருளாதாரச் சுரண்டல் கண்ணுக்குத் தெரியாமல் இடம் பெற்றுக் கொண்டு இருப்பதனைக் காணமுடிகின்றது.

ஏட்டிக்குப் போட்டியாக உருவாகின்ற சில தனியார் கம்பனிகளும், சில தனியார் நிறுவனங்களும் சாதாரண மக்கள் மத்தியில் புகுந்து குறிப்பிட்ட பணத்தினை நாள்க்;கடனாக, கிழமைக்கடனாக, மாதக்கடனாக வழங்கி விட்டு அதனை அதிகூடிய வட்டியோடு அறவிடுவதற்காக முகவர்களை அனுப்புகின்றன.


சிலதனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும் அதிகூடிய விரைவில் பாரிய வருமானத்தினை பெறுவதனை அரசியலாக கொண்டு இவ்வாறான வேகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

இதனை அறியாத சாதாரண ஏழை மக்கள் மொத்தமாக பணத்தினைப் பெற்று ஏதோ ஒரு வகையில் செலவு செய்த பின்னர் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு கிழமையும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதிகூடிய வட்டியோடு செலுத்தவேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்து சீவியம் நடாத்தும் சாதாரண மக்கள் வாழ்கின்ற இடங்களை நோக்கி நகர்கின்ற இந்த தனியார் கம்பனிகள், தனியார் நிறுவனங்கள் வழங்குகின்ற நுண்கடன் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்களை அறியாமலேயே பாதிக்கப்படுகின்றனர். இதனால் உயிர்களும், உடமைகளும் பறிபோகின்ற சந்தர்ப்பங்களை அவதானிக்க முடிகின்றது

குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுவிலுள்ள அனைவருக்கும் ஒரே சமயத்தில் கடன்களை வழங்கி விட்டு அதனை அறவிட வீடு வீடாக முகவர்கள் வருவதோடு ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தினைச் செலுத்தாவிடின் குழுவிலுள்ள  ஏனையோரும் பொலீஸ் நிலையங்கள், நீதீமன்றங்கள் செல்லவேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் உற்றார் உறவினர்கள் சுற்றத்தாரோடு முரண்படவும் நுண்கடன் வழியமைக்கின்றது.

அது மாத்திரமின்றி நுண்கடன் பெண்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது  இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடனை அறவிட வீடு வீடாக ஆண் முகவர்கள் வரும்போது ஊரவர்களால் வீட்டில் உள்ள பெணகள்; மீது பிழையான அபிப்பிராயங்களையும் விதைக்கின்றனர். இதன் பொருட்டு பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி சிதறும் தன்மையையும் காணலாம்.


அன்றாடம் கஸ்டப்பட்டு உழைத்தாலும் சந்தோசமாக சீவியம் நடாத்திய மக்கள் மத்தியில் தொற்றுநோயாகப்பரவியுள்ள நுண்கடனானது மக்களின் நின்மதியையும்,சந்தோசத்தையும் கெடுக்கும் அரக்கனாக உயிர் பெற்றுள்ள தற்போதைய நிலையில் இது ஒரு சாபக்கேடாகவே காணப்படுகின்றது. அன்றாடம் உழைக்கின்ற பணத்தினை கடனுக்கு செலுத்திவிட்டு அன்றாட உணவுக்கு வழிதெரியாமல் பரதவிக்கும் குடும்பங்கள் பல. நன்மை செய்வதாக கூறி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றன சில தனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும்.

நமது முன்னோர் பணத்தனைச் சேகரிக்கவும், மொத்தமாக பெறவும் எவருக்கும் பாதிப்பு வராத வகையிலும் சீட்டுப்பிடித்தல் எனும் முறையினைக் கையாண்டனர். அது தற்பொழுதும் வழக்கில் உள்ளது. குழுவாக இணைந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நபருக்கு  பணத்தினை மொத்தமாகச் சேகரி;த்துக் கொடுப்பர்.  எந்தவித அத்தாட்சியும் இன்றி நம்பிக்கை எனும் பெயரில் இதனைக் கையாண்டனர்.

 இவ்வாறு நம்பிக்கை, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துகெர்ள்ளுதல் போன்ற பல அம்சங்கள் இதனுடாகக் காணப்பட்டது. இவற்றையெல்லாம் இல்லாது ஒழிப்பதற்காக தனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இதன் நோக்கம் எங்களை சுயமாக சிந்திக்க வைக்காமல், செயற்பட வைக்காமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதேயாகும்.

எதையும் அறியாத ஏழை  மக்கள் புழுவிற்குள் தூண்டில் இருப்பதை அறியாத மீன் தூண்டிலில் அகப்பட்டுவது போல்   நுண்கடனில் சிக்குண்டு பரதவிக்கின்றனர்.   இந்த நுண்கடன் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்ற வருடம் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் நுண்கடன் பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றினை பல பிரதேசங்களில் நிகழ்த்தியது அந்த நாடகமானது நுண்கடனால் மக்கள் படும் துன்பங்களை அப்படியே படம் பிடித்துக்காட்டியது கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை பாரிய கடமையினை சமூகத்திற்கு செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலம் சமூகத்தினைப் பாதுகாக்க முடியும்; என்பது திண்ணம்.
எனவே நாங்கள் நுண்கடன் பேயினை விரட்டி நமது முன்னோர் பணத்தனைச் சேகரிக்கவும், மொத்தமாக பெறவும் எவருக்கும் பாதிப்பு வராத வகையிலும் சீட்டுப்பிடித்த முறையினைக் கையாண்டு நாமும் முன்னேறி சமூகத்தினையும் முன்னேற்றுவது சாலச்சிறந்தது.

 கா.அற்புதன்

நுண்கடன் திட்டமும் நிர்க்கதியாகும் மக்களும் Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa
 

Top