பாலம் உடைந்துள்ளதால் பல்வேறு சிரமங்களை அனுபவித்துவருவதாக மக்கள் விசனம்

(ஏஎம் றிகாஸ்)
கிழக்கு மாகாணத்தை மத்திய மலையகத்துடன்;  மட்டக்களப்பு மாவட்டத்தினூடாக இணைக்கும் செங்கலடி-பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள வெலிக்கா கண்டி கிராமத்திற்கான பிரதான பாதையின் பாலம் உடைந்துள்ளதனால் கடந்தசில மாதகாலமாக தரைவழிப் போக்குவரத்துச்சேவை முழுமையாகத் தடைப்பட்டுள்ளது.


பல தசாப்தகாலம் பழைமைவாய்ந்த கோப்பாவெளி கிராமசேவகர் பிரிவிலுள்ள வெலிக்கா கண்டி கிராமத்தில் 336 குடும்பங்கள் வாழ்ந்தன. கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது இருதடவைகள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் இவர்கள் தங்கியிருந்தனர். போர்ச்சூழலின்பின்னர்  பல்வேறு காரணங்களினால் 55 குடும்பங்கள் மாத்திரமே இங்கு மீளக்குடியமர்ந்துள்ளன.

நெல் வேளாண்மை மற்றும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கையை நம்பிவாழும் இவர்கள் போக்குவரத்துக்கான பாதை தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களை அனுபவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

மழைவெள்ளம் ஏற்படும் காலங்களில் இப்பாலம் பகுதியளவில்  உடைப்பெடுக்கிறது. கடந்த மழைக்காலங்களில் இவ்வாறாக நான்கு தடவைகள் உடைபெடுத்தன. அப்போதெல்லாம் தென்னங்குற்றிகளின் உதவியுடன் தண்ணீரைக்கடக்கும் உயிராபத்துமிக்க பயணம் செய்வதாக   வெலிக்காகண்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் ஏற்படும் காலங்களில் பாடசாலை மாணவர்கள் பாலத்தின் கீழ்ப்பகுதியினால் தண்ணீரைக்கடந்து வரும்போது சீருடைகளில் சேறுபட்டு அழுக்கடைவதாகவும் சுத்தம் செய்தபின்னரே கற்பித்தலை ஆரம்பிக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்படுவதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

வெலிக்காகண்டி பிரதேசத்தில் சுமார் 1400 ஏக்கரில் இம்முறை நெல் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்வதற்கு இயந்திரங்களைக் கொண்டுசெல்லவோ அல்லது கூலியாட்களைக்கொண்டு அறுவடைசெய்த நெல் மூடைகளை விற்பனைக்காக எடுத்துச்செல்லவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இப்பாலம் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் வெள்ளம் ஏற்படும் காலங்களில் குப்பைகூழங்கள் பாலத்தின் நீர்வழிந்தோடும் பகுதியை அடைத்துக்கொள்வதன் காரணமாக  வெள்ளம் பாலத்தின்மேல் பகுதியினால் பீரிட்டுப்பாய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் பாதைகளும் இங்கு சீராக இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்திற்கு மத்தியில் வாழும் இம்மக்களின் குறைகளை எந்தவொரு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதை எண்ணி வேதனை தெரிவிக்கப்படுகிறது.

எனவே இப்பாலத்தை உடைப்பெடுக்காதவாறு உரிய முறைப்படி புனர்நிருமாணம் செய்துதருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வெலிக்காகண்டி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.