மத்தியக்கிழக்கு நாடுகளின் வேலைவாய்ப்பினால் ஏற்படும் மர்மமான அவலங்கள்.......!!!

தற்கால சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சினைகளுள் மிக முக்கியமான ஒரு பிரச்சினையாக காணப்படுவது வெளிநாட்டு வேலை வாய்ப்பினைத் தேடிச் செல்வதால் ஏற்படும் சமூக ரீதியான பிரச்சினைகளும் அதனால் ஏற்படும் தாக்கங்களும் ஆகும். இதிலும் குறிப்பாக மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு பெற்றோர் தமது பிள்ளைகளை விட்டு வேலைத்தேடி செல்கின்ற நிலைமையே மிக அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகரித்த வறுமை, சேமிப்பு பழக்கமின்மை, சமூக அந்தஸ்தினை உயர்த்த வேண்டுமென்ற தூரநோக்கு, கணவன் அல்லது மனைவியின் கொடுமை, குடும்ப பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை நாடி செல்கின்றனர். வேலைவாய்ப்பு எனும் போது படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பற்றாக்குறையாக உள்ளமையால் இதனைக் கருத்திற் கொண்டு பணம் உழைக்கும் நோக்கில் ஏராளமான ஆண்களும் பெண்களும் வெளிநாடு நோக்கி செல்கின்றனர்.


இலங்கைவாழ் குடும்பங்களில் பெரும்பான்மையானவர்கள் கிராமப்புறங்களிலும், மிகவும் வறுமையான நிலையிலும் வாழ்வதால் ஆண் உழைக்கின்ற வருமானம் குடும்ப செலவுக்கு போதாமை, நாட்டில் இதுவரை நிலவி வந்த போர்ச்சூழல், அதில் தமது பிள்ளைகளை இழக்க நேரிடும் என்ற அச்சமும், உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், வேறு நாடுகளுக்கு சென்று தமது அத்தியவசிய தேவைகளையாவது பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் தொழிலில் ஈடுபட தூண்டிய விடயங்களுமே மக்களின் அயல்நாட்டு புலப்பெயர்வின் அதிகரிப்பை ஏற்படுத்திய முக்கிய காரணிகளாக அமைகின்றன.


வெளிநாட்டு நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு விளம்பரங்களையும் அதில் கூறப்பட்ட சில அற்ப சொற்பமான சலுகைகளையும் நம்பி பெண்கள் ஏமாந்து தன்னுடையதும் தமது குடும்பத்தினுடையதுமான வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக பெண்கள் குறிப்பாக மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து தொழிற்துறையில் ஈடுபடுகின்;ற தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும் போது வறுமை, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதை விட திருமண பந்தத்தில் இணைந்துக் கொள்வதற்காகவும், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், பட்டதாரிகள் தமது உயர் கல்வியினை வெளிநாடுகளில் தொடர்வதற்காகவும் மேற்குலக நாடுகளை நோக்கி செல்கின்றனர். இதனோடு பாரம்பரிய கருத்தியல்களுக்கு அமைவாக கணவனும் வீடுமே தனது உலகம் என வாழ்;ந்து வரும் பெண்களுக்கு குறிப்பாக கல்வியறிவு குறைவான பெண்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கணவனை இழக்க நேரிடும் போது சுய தொழிலோ அல்லது கைத்தொழிலோ செய்ய முடியாதவர்களாக மாறுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு தெரிந்த ஒரே தொழிலான வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணகளாக செல்வதற்கு முனைகின்றனர்.

இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டில் அநேகமான வெளிநாட்டு பயணங்களின் குறிப்பிட்டு கூறக்கூடிய காரணியாக அமைவது வெளிநாட்டு மோகம்தான். அதாவது மேற்கத்தேய கலாசாரம், உணவு பழக்கவழக்கங்கள், பண்பாட்டு அம்சங்களில் வெகுவாக கவரப்பட்டு விடுவதாலும், ஆடம்பரமான வாழ்க்கை முறையினை வாழ்வதற்காகவும் வெளிநாட்டு மோகம் ஏற்படுகின்றது.

மேலும் கடன் தொல்லைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட்டு கொள்வதற்காகவும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதாவது தனது கணவன்பட்ட கடனை தீர்த்து கொள்ளவும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை, பயம், அவர்கள் மேல் கொண்ட அதீத அக்கறை காரணமாகவும் தொழில் வாய்ப்பினை பெறும் பொருட்டு வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர். ஆகவே மேற்குறித்த அனைத்து காரணிகளுமே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான மிக முக்கியமான காரணிகளாக அமைகின்றன எனலாம்.

எவ்வாறாயினும் மக்கள் வேற்று நாடுகளுக்கு செல்வதன் நோக்கங்களில் அடிப்படையான நோக்கமாக அமைவது பொருளாதார தேவைக்காகவும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துக் கொள்வதற்காகவுமே புலம்பெயர்ந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மனிதனது தேவைகள் எண்ணிலடங்காதவை அது காலத்துக்கு காலம் ஏன் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும். 'மனிதன் என்பவன் முடிவில்லாத தேவைகளைக் கொண்டவனாவான். ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவன் இன்னொரு தேவையின் திருப்தியை நாடி நிற்பான்' இத்தகைய தேவைகள் ஒரு வரிசை அமைப்பாக காணப்படும். இப்படிநிலை அமைப்பின் கீழ்பகுதியில் காணப்படுபவை பௌதீக தேவைகளாகும். இதனுள் உடலியல், பாதுகாப்பு, சமூகத் தேவைகள் என்பன உள்ளடங்குகின்றன. மேற்பகுதியில் உளவியல் தேவைகள் காணப்படுகின்றன. இதனுள் தன்னலத் தேவை மற்றும் கௌரவத்தேவை என்பன உள்ளடங்குகின்றன (பெனடிக் பாலன். யோ, 2001: பக்கம் 24).

உடலியற் தேவைகள் எனும் போது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள், தாகம் மற்றும் பாலூக்கம் என்பன உள்ளடங்குகின்றன. இத்தேவைகள் எழும் போது ஏனையத் தேவைகள் பின் சென்றுவிடும். உதாரணமாக் பசியால் வாடுபவனுக்கு உணவைத் தவிர வேறெதிலும் நாட்டம் எழாது என்பதைக் கூறலாம். பாதுகாப்புத் தேவை என்பதும் மனிதனுக்கு இன்றியமையாதது. அது போலவே அன்புத் தேவையும் முக்கியமானதாகும். அன்புத் தேவை எனும் போது மனிதன் தனது குடும்பத்தார், உறவினர்கள், சுற்றத்தார், மற்றும் நண்பர்கள் மீது அன்பைச் செலுத்தி அவர்களிடம் இருந்து அன்பை பெறுகின்றான். இதனூடாக அவனது அன்புத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. இவ்வாறாக கிடைக்க வேண்டிய அன்பு சிறுபராயத்தில் இருந்தே ஒருவனுக்கு கிடைக்காமல் போனால் அது அவனது ஆளுமை விருத்தியை பாதிப்பதுடன் அவனது வாழ்வில் நெறிப்பிறழ்வையும் ஏற்படுத்தும் (ஐடினை).

இலங்கை அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு என்ற காரணத்தினாலும் இது ஒரு விவசாய நாடு என்பதனாலும் பொருளாதார விடயங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இத்தகைய நிலைமையில் தொழிலின் நிமித்தம் பெற்றோர் வெளிநாட்டுக்கு சென்று பணம் தேடும் தன்மையே மிக அதிகமாக காணப்படுகின்றது. அதாவது அபிவிருத்தியெனும் பதமானது சமூகவியல் எனும் கற்கை என்று ஆரம்பிக்கப்பட்டதோ அக்காலத்திலிருந்தே இப்பதமும் வளரத் தொடங்கியது. அந்தவகையில் ஒவ்வொரு மனிதனும் தனது சுதந்திரம், சுயம், அடிப்படை வசதிகளில் தன்னை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக ஏதாவது ஒரு வகையில் பொருளாதார ரீதியாக விருத்தியடைய எத்தணிக்கின்றான்.

அந்த வகையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் காரணமாகவே பெற்றோர் வெளிநாடுகள் நோக்கிப் பயணிக்கின்றனர். அதனால் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. அது காலத்தின் சதியும் அல்ல, சூழ்ச்சியும் அல்ல. மாறாக மனிதகுலம் வாங்கிக் கொண்ட விரும்ப தகாத வரமாகும். இவ்வாறாக வெளிநாட்டுப் புலம் பெயர்தலானது சர்வதேச ரீதியில் அதிகமாக காணப்பட்டாலும் குறிப்பாக மத்தியக்கிழக்கு நாடுகளுக்கே மிக அதிகமாக மக்கள் செல்லும் நிலை காணப்படுகின்றமையை காணலாம்
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லுகின்ற போது பெற்றோர், பிள்ளைகள் என இரு தரப்பினருக்குமே பிரச்சினையாக அமைந்து வருகின்ற தன்மையை அநேகமாக காணலாம். அதாவது பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு பெற்றோர் வேலை வாய்ப்பினைத் தேடி செல்லும் போது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு என்பன கிடைக்காமல் போய் விடும். மேலும் அவர்களின் நெறிப்பிறழ்வான நடத்தைகளும் சமூகத்தில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்கால சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக வர வேண்டிய பிள்ளைகளை சமூகம் இயல்பாகவே ஓரங்கட்டி விடும் நிலைமை ஏற்படும்.

அதே போலவே பெற்றோரும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வெளிநாடு செல்லும் முன்பே அவர்களது கௌரவம், சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை இழக்க தயார் என்று ஒப்புதல் வாக்கு அளித்துவிட்டு தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அதாவது தொழிலுக்கு சென்ற இடத்தின் முதலாளிகளுக்கு தம்மை அர்ப்பணித்தும், அவர்களின் கீழ் அடிமைகளாக வாழ்ந்தும், அவர்களின் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் தமது சுதந்திரம், உரிமை, மற்றும் பாதுகாப்பு என்பவற்றை தியாகம் செய்தும் தான் வாழ்கின்றனர். அவர்களை எதிர்தோ மறுத்து பேசினாலோ பழிவாங்கல், உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் நிலைமை தான் அதிகமாக காணப்படுகின்றன.

உழைக்கும் ஆசையில் வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பங்களை இழக்கும் பணிப்பெண்கள் இன்று துடிக்கும் இதயத் துடிப்பினைக் கூட நிறுத்தி வைத்து விட்டு உயிருக்கு ஊசலாடிக்கொண்டும் உயிரை தியாகம் செய்தும் உழைக்கின்றனர். மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்
கொடுக்கின்றனர் என்பது இரகசியமான விடயமல்ல. அவர்கள் செல்லும் நாட்டில் அவர்கள் முகம் கொடுக்கும் கொடூரங்கள் பல விதம். அதே போல் தான் அவர்களது குடும்பங்கள் இங்கு அனுபவிக்கும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்தே எத்தனைப் பெண்களின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டன. எத்தனை பெண்கள் கர்ப்பிணிகளாகத் திரும்பினர். இது தொடர்பாக நாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக அனுப்பி வைக்கப்படும் நிலை இன்னும் மாறவில்லை என்றே கூறவேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிலும் அண்ணிய செலாவணியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் இடம்பெற்றாலும் இவ் வெளிநாட்டு வேலையின் மோகம் குறையும் வரை சீரழிவுகள் நிச்சயம் இடம்பெறும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

மத்தியக்கிழக்கு நாடுகளை நோக்கிய பயணத்தால் பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகின்ற சந்தர்ப்பமே மிக அதிகமாக காணப்படுகின்றது. இன்று மத்தியக்கிழக்கு நாடுகளில் சுமார் ஏழு இலட்சம் இலங்கை பெண்கள் பணிப்பெண்களாக இருக்கின்றனர். இவர்களில் குறிப்பாக பதினெட்டு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்டவர்களின் தொகையே அதிகமாக காணப்படுகின்றன. இவ்வாறாக வெளிநாடுகளுக்கு சென்று வருகின்ற பெண்களை சமூகம் ஒரு குற்றவாளியை பார்ப்பது போலவே பார்க்கின்றது, சமூகம் ஒதுக்கி வைக்கின்றது, அவர்களுக்கு திருமணம் என்பது ஒரு எட்டாக் கனியாகத்தான் காணப்படுகின்றது. இதனால் விரக்தியடைந்த பெண்கள் மன உலைச்சலுக்கு உள்ளாவதுடன் தற்கொலை போன்ற விடயங்களிலும் தம்மை மாய்த்துக் கொள்கின்ற தன்மையும் சமூகத்தில் பெரும்பாலாக காணப்படுகின்றது.

வெளிநாட்டு வேலையின் கொடுமைகள் காலத்திற்கு காலம் அதிகரித்த வண்ணமாகத்தான் உள்ளது. அதாவது கணவனோ அல்லது மனைவியோ வெளிநாட்டு வேலை வாய்ப்பினைத் தேடிச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்கள் சென்ற பின்னர் கள்ளத் தொடர்புகள், மறுமணம் முடித்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவது இலங்கைப் போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. மேலும் இவர்கள் அனுப்பும் பணத்தில் பிள்ளைகளை கவனிப்பதை விட கள்ளத் தொடர்பு வைத்துள்ள பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமே அதிகமாக செலவிடுகின்றனர். இதனால் குடும்ப வாழ்க்கை சீரழிவதுடன் தந்தை மட்டுமல்ல மாமா, பாட்டன் ஆகியோர் வெளிநாடு சென்ற பெண்ணின் பிள்ளைகளை துஷ;பிரயோகத்திற்கு உட்படுத்தும் சம்பவங்களும் அதிகமாகும். இவர்களுக்கு தீர்வு கிடைப்பது எப்போது?

இவ்வாறாக வெளிநாடுகளுக்கு செல்வது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக என்றாலும் இதனால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. வெளிநாடு செல்பவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகளும் உடலியல், உளவியல் மற்றும் சமூகவியல் ரீதியாக
பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. அதாவது பிள்ளைகள் கல்வி நிலையில் பாதிக்கப்படுதல், சிறந்த பாதுகாப்பின்மையால் தான்தோன்றி தனமாக சமூகத்தில் பழகுதல், தவறான நடத்தையில் செல்லுதல் அதாவது போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல், இளவயது திருமணம், இலட்சியமற்ற வாழ்க்கையை வாழ்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதைக் காணலாம்.

ஆகவே வெளிநாட்டு வேலைவாய்ப்பினை தேடிச் செல்வதால் பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. ஆகவே இப்பிரச்சினை ஆய்விற்குரிய பிரச்சினையாக உள்ளது. மேற்குறிப்பிட்ட வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பினைத் தேடிச் செல்லும் பெற்றோருக்கும், அவர்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்கும் பல்வேறு வகையான சிக்கல்களும் இடையூறுகளும், உடல், உள மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறாக ஏற்படும் அநீதிகளைக் குறைத்து அனைத்து மக்களும் கௌரவத்துடனும், சுதந்திரத்துடனும் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டுமெனில் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பிலான எண்ணம் மக்கள் மத்தியில் நலிவடைந்து உள்நாட்டிலேயே உழைத்து பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமென்ற தூர நோக்குடைய சிந்தனை ஒவ்வொரு தனியாள் மத்தியிலும் எழவேண்டும். அதற்கு உள்நாட்டின் தொழிற்துறை தொடர்பில் அரசும், அரசாங்கமும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

தொகுப்பு : ரா. தயாணி,
சமூகவியல் சிறப்புத்துறை (விடுகை வருடம்),
சமூகவிஞ்ஞானங்கள் துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.