பாலியல் இலஞ்சம்: மஞ்சத்தில் பஞ்சம் - பகுதி - 01

சமூகத்தில், பல் பரிமாணத்தில் உலாவருகின்ற, தீவிரமானதும் அபாயகரமானதுமான சமூகப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகளை தீட்டுவதற்காக ஒவ்வொருவரும், அப்பிரச்சினைகளை தங்களுடைய பட்டறிவு, பகுத்தறிவு, படித்தறிவு மற்றும் பண்பறிவு போன்ற பல் பரிமாணக் கண்ணாடிகளுடாகவே பார்க்க வேண்டிய பண்பாடு இன்றைய நாகரிக உலகில் உருவாகியிருக்கிறது.
இன்றைய இலங்கையில், சேவை இலஞ்சம் சார்ந்து பெருகி வருகின்றதொரு முக்கிய  பிரச்சினையான "பாலியல் இலஞ்சம்" பற்றிய ஆராய்தலும் அதனைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் அவசரமானதும், அவசியமானதுமான தேவையாக எழுந்திருக்கிறது. 
"பாலியல் இலஞ்சம்" பற்றி நோக்குவதற்கு முன்னர், பாலியலையும் இலஞ்சத்தினையும் தனித்தனியாக பிரித்து ஆராய வேண்டியிருக்கிறது. இனிவருகின்ற பந்திகளில் "பாலியலை" சில விளக்க புரிதல்களுக்காக "பாலுணர்வியல்" என்று குறிப்பிடுவது சிறப்பாகவிருக்கும். 
இலஞ்சம் என்பதன் அர்த்தம் என்ன? 
தனிநபர்கள் அல்லது ஒரு குழுமம் தங்களுடைய உத்தியோகப் பணி சார்ந்த பதவினையும், அதிகாரத்தினையும் தவறான முறையில் பயன்படுத்தி, தங்களுடைய சுய இலாபங்களை அடைவதனையே ஊழல் அல்லது இலஞ்சம் என்று குறிப்பிடுகின்றனர். அத்தோடு இலஞ்சமானது பொருட்களாகவோ அல்லது சேவைகளாகவோ பரிமாறப்படுகிறது.
இலஞ்சமானது எத்தகையதொரு குற்றம்?
இலஞ்சம் வாங்குவதும், வழங்குவதும் சட்டரீதியான குற்றங்களாக இருப்பதும், வெவ்வேறு வகையான இலஞ்சக் குற்றங்களுக்காக இலங்கையில் இன்றளவிலும் தண்டனைகள் வழங்கப்பட்டும் நிறைவேற்றப்பட்டும் வருகின்ற நிலையிலும், இலஞ்சமானது இன்னும் வஞ்சமாகவே எஞ்சியிருக்கிறது.
பாலியல் இலஞ்சம் மற்றும் பாலியல் வன்கொடுமை: வேறுபட்ட பிரச்சினைகளா?
"பாலியல் இலஞ்சம்" மற்றும் "பாலியல் வன்கொடுமை" அல்லது "வன்புணர்வு" என்பன பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும் சமூகப் பிரச்சினைகளாகும். இருந்த போதிலும் இவ்விரண்டு பிரச்சினைகளும் பாலியலின் வெவ்வேறு பரிமாணப் பிறழ்வுகளின் வேறுபட்ட தலையிடிகளாகும். 
இன்றைய பத்தியானது "பாலியல் இலஞ்சம்" பற்றியே பேசவிருக்கிறது, அத்தோடு "பாலியல் வன்கொடுமை" பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராயலாம்.
பாலியல் இலஞ்சம் என்றால் என்ன?
முதலில் கீழ்குறிப்பிடப்படுகின்ற செய்திக் குறிப்புகளை வாசித்து உணர்ந்ததன் பின்னர், பாலியல் இலஞ்சத்தினை வரைவிலக்கணப்படுத்துதல் இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கும்
"பிள்ளையினை பாடசாலையில் சேர்ப்பதற்கு பெற்றவளிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்",  "உதவியாக வழங்கப்படவிருக்கின்ற வீட்டிற்காக கணவனை இழந்த மனைவியிடம் பரிகாரமாக பாலியல் இலஞ்சத்தினை எதிர் பார்க்கும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்".
"பொலிசில் முறையிடப்பட்ட பாரதூரப் பிரச்சினையினை சுமுகமாகத் தீர்ப்பதற்கு, தன் படுக்கை அறைக்கு பெண்ணை அழைக்கும் பொலிஸ் அதிகாரி",  "ஆராய்ச்சிக் கட்டுரையினை மேற்பார்வை செய்வதற்கு படுக்கையினை தன்னோடு பகிர்ந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கும் பேராசிரியர்".
"வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதற்கு  ஏழை விவசாயியின் மனைவியை தன்னிடம் அடவு வைக்க அறிவுரை கூறும் வங்கி முகாமையாளர்",  "சாலையில் போக்குவரத்து விதிகளை மீறிய பெண் வாகன ஓட்டுனர், ஆண் பொலிசாரின் சட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கு பாலியல் இலஞ்சம் தருவதாகத் தெரிவித்தல்".
மேற்குறிப்பிட்டவைகள் இன்றைய நாளேடுகளினதும், இணையத் தளங்களினதும் முன்பக்கங்களை கொட்டை எழுத்துக்களில் அலங்கரிக்கும் "பாலியல் இலஞ்ச" அசிங்கச் செய்திகளாகும்.
ஆகவே, ஒருவர் தன்னுடைய உத்தியோக பதவி அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னுமொருவரிடம் பாலுணர்வினை இலஞ்சமாகக் கோருதலும், அதற்கு இசைவு படுகின்ற ஒருவர் தன்னுடைய பாலுணர்வுகளை இலஞ்சமாக செலுத்துதலுமே பாலியல் இலஞ்சம் என்று கொள்ளப்படுகிறது. 
மேலும், பாலியல் இலஞ்சமானது சேவை சார்ந்த இலஞ்சப் பரிமாற்றம் என்றும் கூறப்படுகிறது.
பாலியல் இலஞ்சத்தின் தோற்றுவாய்?
ஒரு பொருள் அல்லது சேவையின் மீதான திருப்தி இன்மையே ஒருவருக்கு இன்னுமொரு பொருள் அல்லது சேவையின் மீதான நாட்டத்தை ஏற்படுத்துகிறது. பொது நலத்தை பாதிக்காத வரைக்கும் இந்த சுய நல நாடல் திட்டம் வெற்றி பெறுவதாய் இருக்கிறது. 
இவ்வாறு பொது நலத்திற்கு கேடு விளைவிக்கப்படுகின்றபோதுதான் அந்த சுய நலத்திட்டமும் ஊழல் அல்லது இலஞ்சமாக மாறுகிறது. இவ்வாறு மாறிய சேவை சார்ந்த ஒரு ஊழலே "பாலியல் இலஞ்சம்" என்றும் சொல்லப்படுகிறது.
பாலுணர்வு என்பது யாது?
ஒரு மனிதன், உடல், உள ரீதியான ஒழுங்குபடுத்தப்பட்ட விருத்தியின் தொடர்ச்சிப்படியாக, குறிப்பிட்ட வயது மட்டத்தில் பருவமடைகின்றார். பருவமடைதலின் பின்னர், அவரிடத்திலே உடல், உள மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. 
மேலும் அவ்வாறான மாற்றங்கள் அவற்றுக்கு பொறுப்பான ஓமோன்களால் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறு பொதுவாக பருவமடைந்த மனிதனிடத்திலே எழுகின்ற ஒருவித தனித்துவ உணர்வு நிலையே பாலுணர்வு என்று கருதப்படுகிறது. 
பாலுணர்வு என்பது ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானதா?
ஆம், பருவமடைந்த ஒரு மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு இவ்வுணர்வும் அவற்றுக்கான பொருத்தமான துலங்கற் செயற்பாட்டு பொறிமுறைகளும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
சாதாரண மனிதனின் நாளாந்த வாழ்க்கை நிலைகளில் பசி, உறக்கம் போன்ற உணர்வுகள் எழுவதும் அவற்றுக்கான சரியான பரிகாரங்கள் சரியான நேரங்களில் வழங்கப்படுவதும், தவறுகின்ற பட்சத்தில் அம்மனிதன் வெவ்வேறு வகையான நோய்த் தொந்தரவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாப நிலைகளையும், சிலருடைய வாழ்க்கையில் அவதானிக்க முடிகிறது.
அதே போன்றுதான் பருவமடைந்த ஒரு மனிதனிலும், மேற்குறிப்பிடப்பட்ட உணர்வு நிலைகளுக்கு மேலதிகமாக சில வேளைகளில் பாலுணர்வுகளும் வெளிக்கிளம்புகின்றன. அவற்றுக்கான பொருத்தமான பரிகாரங்களும் சரியான விதத்தில் கிடைக்கப் பெறுதலும் அவசியமானதாகவிருக்கிறது.
பாலுணர்வினை அடக்குவது சரியா? தவறா?
பொருத்தப்பாடில்லாத அடக்கு முறை தவறு. அடக்குவதனை விட சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சிறந்தது. 
அத்தோடு, அப்பாலுணர்வுகளுக்கான சரியான பரிகாரங்கள் கிடைக்கின்ற போது, அவை தணிக்கப்படுவதாகவும், இல்லையேல் இயற்கைக்கு மாறான பாலுணர்வு தணிப்புகளை நாடிச் சென்று விபரீதத்தில் முடிவதாகவும் சொல்லப்படுகின்றது.
பாலுணர்வு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
ஒருவர் பாலுணர்வு ஈர்ப்பிற்கு உட்படுவதும், இன்னுமொருவரிடத்தில் பாலுணர்வு ஈர்ப்பினை தூண்டுவதும், பாலுணர்வு வெளிப்பாடுகளின் முக்கிய இயல்பாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வீர்ப்பானது ஒருவரின் உடலமைப்பு, உடலழகு, உடல் மொழி, செய்கைகள், பண்பு, மரபணு, கலாச்சார செல்வாக்கு மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப ஏற்படும் மாற்றங்களின் மூலம், மற்றவரிடத்தில் வெவ்வேறு அளவு மட்டங்களில் பாலுணர்வு ஈர்ப்பினை தூண்டலாம் அல்லது இன்னும் சிலரிடத்தில் தூண்டாமலும் விடலாம்.
பாலுணர்வு செயற்பாட்டு அனுபவங்கள் எவை?
ஒரு பருவமடைந்த ஆரோக்கிய மனிதனின் பாலுணர்வு வெளிப்பாடுகளும் அனுபவங்களும், சாதாரண பாலுணர்வு சிந்தனைகளில் ஆரம்பித்து, பாலுணர்வு கற்பனைகள் மற்றும் ஆசைகளாக மாறி, நம்பிக்கையுள்ள நடைமுறை பாலுணர்வு நடத்தைகளை நாடி, சிறப்பான அணுகுமுறையினூடான பாலுணர்வு உறவுகளில் முற்றுபெறுகிறது.
பொதுவாக உளவியல் பாலுணர்வு, பருவமடைவதற்கு முன்பே விருத்தியடையத் தொடங்கினாலும், பருவமடைதலின் பின்னரே குறிப்பிடத்தக்களவிலான முனைப்பினைப் பெறுகின்றன. 
பாலுணர்வு செயற்பாட்டின் முக்கிய நோக்கம் யாது?
பாலுணர்வின் முதன்மையானதும் முக்கியமானதுமான நோக்கம் யாதெனில், இனவிருத்தி பொறிமுறையாகப் பயன்படுத்தப்படல், இதுவே விலங்குகளினதும் இயற்கையான பாலுணர்வு நோக்கமாகும். 
இருந்த போதிலும் பாலுணர்வானது மனிதனில், அன்பு, காதல், காமம் மற்றும் கற்பு போன்ற உளவியல் சார்ந்த உணர்வுகளின் வடிகாலாகவும் நோக்கப்படுகிறது. மேலும் பாலுணர்வினை உயிரியல், சூழல் மற்றும் மரபியல் சார்ந்தும் அறிஞர்கள் விளக்குகிறார்கள். 
பாலுணர்வு செயற்பாட்டின் ஆரோக்கிய அனுகூலங்கள்?
ஆரோக்கிய பாலுணர்வு உறவுகள் பின்வரும், மனித ஆரோக்கிய விடயங்களில் நேர்முக தாக்கம் செலுத்துகின்றன. அவையாவன: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, ஆண்மை உயர்வு ஊக்கி, பெண்களின் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டு முன்னேற்றம், இரத்த அழுத்த கட்டுப்பாடு, உடற்பயிற்சி பொறிமுறை, மாரடைப்பு ஆபத்தைக் குறைத்தல், புரஸ்ரேட் புற்று நோய் குறைதல், நித்திரையை சீர்படுத்தல் மற்றும்   மனவழுத்தம் தளர்தல் என்பனவாகும்.
பாலுணர்வு செயற்பாட்டு வழிப்படுத்தல்கள் எவை?
பருவ பக்குவமடைந்தவர்களுக்கிடையில் எழுகின்ற பாலுணர்வானது மிக முக்கியமான விடயம் எனவும் அவற்றுக்கான துலங்கல் வெளிப்படுத்தல்களில் பின்பற்றப்படுகின்ற பாலுணர்வு பொறிமுறைகள் அவற்றினை விடவும் முக்கியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. 
ஏனெனில், ஒழுக்கம், சட்டம், அறநெறி, தத்துவம் மற்றும் இறையியல் போன்ற புறக்காரணிகளின் செல்வாக்கு, ஒரு பருவமடைந்த மனிதனின், ஆரோக்கிய பாலுணர்வு வெளிப்படுத்தலையும் அதற்குரிய வழிப்படுத்தல்களையும் நெறிப்படுத்துகின்றன.
பாலுணர்வினை மனித உரிமையாக கருத முடியுமா?
ஆம், பாலுணர்வும் இனவிருத்திச் செயற்பாடுகளும், மனித உரிமைகளில், ஒன்றாக பேணப்பட வேண்டும் என்பதோடு பாலுணர்வு தனியுரிமை பற்றியும் மதிப்பளித்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. 
அடுத்த வாரமும் வரும்...........
Dr.  கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.