பாலியல் இலஞ்சம்: மஞ்சத்தில் பஞ்சம் - பகுதி - 02

பாலுணர்வு உறவுகள் என்றால் என்ன?
ஒருவர் தன்னுடைய பாலுணர்வு தூண்டல்களுக்கான துலங்கல்களை அடைவதற்கு இன்னுமொருவருடன் ஏற்படுத்திக் கொள்கின்ற நிரந்தர மற்றும் தற்காலிக இணைப்புகளே பாலுணர்வு உறவுகளாகும். இவை சில சந்தர்ப்பங்களில் மேற்கூறிய பாலுணர்வு வேட்கை சார்ந்து, ஒருவர் பலருடன் ஏற்படுத்திக் கொள்ளும் பிணைப்புகளாகவும் இருக்கும்.

மேற்குறிப்பிடப்பட்ட பாலுணர்வு உறவுகள், சட்டமுறையான திருமணம், மரபு ரீதியான திருமணம், ஒரு பால் திருமணம், மணமற்று ஒன்றி வாழ்தல், பாலுணர்வு பொருத்தம் பார்த்திருத்தல், இன்ப உலா, காதல், சுய இன்பம் அனுபவித்தல், ஓரினச் சேர்க்கை மற்றும் இருபால் பாலுணர்வுச் சேர்க்கை போன்ற பரந்து பட்ட பல்வகைமையை கொண்டிருக்கிறது.
ஓரினச் சேர்க்கை பாலுணர்வு உறவு முறை சரியானதா? தவறானதா?
ஓரினச் சேர்க்கையானது, உளவியல் விளக்கங்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் மதக் கொள்கைகளின் அடிப்படையிலும் விஞ்ஞான மற்றும் மருத்துவவியல் கொள்கைகளின் பார்வையிலும் பாலுணர்வு பிறழ்வு, உறவுகளாகவே நோக்கப்படுகிறது.
பாலுணர்வு உருவாக்கங்களோடு தொடர்புடைய மனித உடலின் உறுப்பு எது?
பாலுணர்வு தூண்டல்கள் மற்றும் அவற்றுக்கான துலங்கள் என்பனவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தும் உடல் அங்கமாகவும், பிரதான இயக்கு மையமாகவும், மனித மூளையே செயற்படுகிறது. 
பாலுணர்வு பற்றிய உடற் தொழிற்பாட்டு பொறிமுறையினை விளக்க முடியுமா?
புலன் வாங்கிகளின் மூலம் உள்ளீர்க்கப்படும் பாலுணர்வுத் தூண்டல்கள், உடலிற் சுரக்கப்படும் பாலுணர்வு ஓமோன்களின் மூலம், பாலுணர்வு சிந்தனைகள், கற்பனைகள் மற்றும் ஆசைகளாக உந்தப்பட்டு பின்னர் அவை பாலுணர்வு மின்சாரமாக நரம்புகளினூடு கடத்தப்பட்டு விளைவு காட்டி உறுப்புகளான தசை மற்றும் தோலைச் சென்றடைந்து, பாலுணர்வு நடத்தைகளாக பரிணமிக்கின்றன என்பதே பாலுணர்வு நடத்தைகளுக்குரிய மிக எளிமையானதும் இலகுவானதுமான விஞ்ஞான விளக்கமாகும்.
பாலுணர்வு பற்றிய இலக்கியப் பார்வை எவ்வாறானது?
மானிட வாழ்க்கையின் பருவ வயதினை, பின் தொடர்ந்து வருகின்ற பகுதிகளை வளப்படுத்தி, முற்று முழுதான ஆரோக்கிய வாழ்வாக மாற்றுவதற்கு, பாலுணர்வு வெளிப்படுத்தல்களும் அவற்றுக்குரிய பொருத்தமான துலங்கல்களும் இன்றியமையாதவை என்பதனை உலகப் பொது மறையான திருக்குறள் காமத்துப்பால் என்ற அதிகாரத்தினுள், காதல், கற்பு மற்றும் அகவொழுக்கம் போன்ற பகுதிகளில் பகுத்தறியச் செய்திருக்கிறது. 
அத்தோடு இன்னுமொரு இலக்கிய நூலான அக நானூறு பாலுணர்வினை, கற்பு, தனி மனிதவொழுக்கம், இல்லறவொழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்த மரபு முறைகளினூடு தெளிவுபடுத்தியிருக்கிறது.
பாலுணர்வு சார்ந்த மதக் கொள்கைகள் எவ்வாறானவை?
ஆன்மீகத்தை முதன்மைப்படுத்தி தொழிற்படுகின்ற, உலகிலுள்ள ஒவ்வொரு மதங்களும் பாலுணர்வின் முக்கியத்துவத்தினை தங்களது மதக்கொள்கைகள் சார்ந்து பதிவு செய்திருக்கின்றன. 
பாலுணர்வானது அடிப்படையில் ஆன்மீகம் சார்ந்ததென்று சில மதங்களும், இன்னும் சில மதங்கள் அவை லௌகீகம் சார்ந்ததென்றும், வேறு சில மதங்கள் ஆன்மீக லௌகீகத்தோடு இணைந்தது என்றும் குறிப்பிடுகின்றன. 
மேலும், பாலுணர்வு நடத்தைகள் சமய சடங்குகளோடு ஒன்றித்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததென்று சில சமயங்களும், உண்மையில் ஆன்மீக லௌகீக வாழ்கையின் இடைவெளியினை நிரப்பி பரிபூரண வாழ்க்கையினை முழுமைப்படுத்துவதே, பாலுணர்வு செயற்பாடுகள் என இன்னும் சில மதங்களும் குறிப்பிடுகின்றன. 
யூத மதப் பாலுணர்வு யாது?
அந்த வகையில் யூத மதம் குறிப்பிடுவது யாதெனில், இரு பால் திருமணத்திற்கு பின்னரான பாலுணர்வு வெளிப்படுத்தல்கள் புனிதமானதும் மகிழ்சியானதும் என்பதோடு பிரம்மசாரியத்தை பாவங்களில் ஒன்றாக குறிப்பிடுகிறது.
கிறிஸ்தவ மதப் பாலுணர்வு யாது?
ஆண் - பெண் திருமண வரையறுக்குட்பட்டு நடை பெறுகின்ற பாலுணர்வு நடத்தைகள் உன்னதமான போற்றத்தக்க விடயமென்றும், சுய இன்பம் அனுபவித்தல் மற்றும் ஓரினச் சேர்க்கை என்பன உள்ளார்ந்த ஒழுங்கீன பாவச் செயற்பாடுகள் என்று கிறிஸ்தவ மதம் சுட்டிக் காட்டுகிறது.
இஸ்லாமிய மதப் பாலுணர்வு யாது?
பாலுணர்வானது, இயற்கையான வேட்கை என்பதோடு அடக்கி வைக்கப்பட முடியாத உணர்வுகளாகும். ஒரு தார அல்லது பல தார திருமண பொறிமுறைக்குள்ளேயே பாலுணர்வு ஆசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும் வற்புறுத்தப்படுகிறது. 
ஓரினச் சேர்க்கை என்பது முற்றாக தடைசெய்யப்பட்ட விடயம் என்பதோடு, ஒட்டு மொத்தத்தில் திருமணம் என்பதன் அர்த்தமே "உடலுறவுச் சேர்க்கை" என்பதுதான் என்று தன்னுடைய மறை நூலான குர் ஆனை மேற்கோள் காட்டி இஸ்லாமிய மதம் விளக்குகிறது.
இந்து மதப் பாலுணர்வு யாது?
இந்துமத தெளிவு படுத்தல்களில், பாலுணர்வு வேட்கையானது பாலுணர்வு இன்பத்தை அனுபவிப்பதன் ஊடாக தணிக்கப்பட வேண்டுமென்றும், அதற்கான மிகப்பொருத்தமான உறவு முறை கணவன் - மனைவி என்கிறது. 
அத்தோடு பாலுணர்வு நடத்தைகள் திருமண உறவின் முக்கியமான கடமை என்றும் சுட்டிக்காட்டுகிறது. திருமணத்திற்கு முற்பட்டதும், 25 வயதிற்குட்பட்டதுமான பாலுணர்வு உறவுச் செயற்பாடுகள் ஒரு மனிதனின் அறிவு மற்றும் ஆளுமை விருத்தியில் தாக்கம் செலுத்துகிறது என்றும் குறிப்பிடுகிறது.
பாலியல் இலஞ்சம் எந்த நோயின் அபாய அறிகுறி?
பாலியல் அடிமையாதல், பாலுணர்வு விழிப்புணர்வின்மை, பாலியல் விருப்பு மற்றும் நாட்டமின்மை போன்ற பாலியல் பிறழ்வுகளின் ஆபத்தான அறிகுறிகளாகும்.
பாலியல் இலஞ்சம் பற்றிய அறிவியல் நோக்கு?
பல்வேறு நபர்களின் பாலுணர்வுத் தேவைகளினதும் அத் தேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்கு அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட பாலுணர்வுத் சேவைகளினதும் தேறிய நஸ்ட இடைவெளியே இப்பிரச்சினைக்கான பொதுக்காரணியாகும். 
சுருக்கமாகச் சொன்னால் "பாலியல் தேவைகளுக்கான பொருத்தமான பாலியல் சேவைகளின் பஞ்சமே" பாலியல் இலஞ்சமாகும்.
அந்த சேதாரத்தை சீர் செய்வதற்காக அதிகார மற்றும் பதவிப் பலத்தினை கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிப் பொறிமுறையே "பாலியல் இலஞ்சத்தின்" கோருதலும் தருதலும் ஆகும்.
பாலியல் இலஞ்சத்தின் பெறுநர்கள் மற்றும் கொடுநர்கள்?
பொதுவாக "பாலியல் இலஞ்சமானது", சமுதாயத்தில் உயர் பதவி அல்லது அதிகார நிலைகளில் உள்ளவர்களால் எதிர்பார்க்கப்படுவதும், சமுதாயத்தில் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அறிவியல் மட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களால், பெரும்பாலான சந்தர்ப்பத்தில் அவர்களின் சுயவிருப்பின்மையினாலும் பூரண சம்மதம் இல்லாமலும் வழங்கப்படுகிறது.
பாலியல் இலஞ்சத்தின் வரலாறு?
பாலியல் இலஞ்சம் என்ற பிரச்சினையானது, இன்று நேற்று தோன்றியதல்ல ஏனைய சில சமூகப்பிரச்சினைகள் போன்று தொன்மையானதுதான், அத்தோடு வெளிக்கொணரப்படும் பாலுணர்வு பிரச்சினைகளின் எண்ணிக்கையும் பனிப்பாறையின் வெளித்தெரியும் பகுதி போன்றதே. 
பாலியல் இலஞ்சத்தை வெளிப்படுத்துவதிலுள்ள தடைகள்?
ஏனைய சுகாதார பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில் இவை மிகவும் உணர்ச்சியுள்ளவையாகவும், பாதிக்கப்படுபவர்கள் மீதான ஓர வஞ்சனைப் பார்வையும் அதனூடான சமூக ஒதுக்குதல்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களின் குறுகிய மடைமைத்தன நோக்கமுடைய அனுசரித்தல் போக்கு என்பவையே இப்பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்ப்பதில் முக்கிய முட்டுக் கட்டைகளாகவுள்ளன.
பாலியல் இலஞ்சத்தின் புதிய பரிமாணங்கள் எவை?
இப்பிரச்சினையின் புதிய பரிமாணமாக பாலியல் இலஞ்சமானது ஆண்களால் பெண்களிடத்தில் மாத்திரமல்லாமல், சில பெண்களால் ஆண்களிடத்திலும் கோரப்படுகிறது
மேலும் ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் இலஞ்ச செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது
அத்தோடு கோரப்படுவதனையும் தாண்டி பாலுணர்வை இலஞ்சமாக கொடுப்பதற்கான முனைவுகளின் அளவும் அதிகரித்து வருகிறது.
ஏன் பாலியல் இலஞ்சம் மற்றய ஊழல்களை விட கொடுமையானது?
ஏனைய ஊழல்களை போலல்லாமல் பாலியல் இலஞ்சத்தில் இருக்கின்ற கடினமான பின்விளைவுகள் யாதெனில் பாலியல் இலஞ்சம் கோருகின்றவர்களும் கொடுக்கின்றவர்களும் கோணொரியா, சிபிலிசு மற்றும் கொடிய எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்த் தொற்றுக்களால் பீடிக்கப்படுவதும், அவர்கள் சார்ந்து உண்மையோடும் உரிமையோடும் பாலுணர்வு ஆசைகளை பரிமாற இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு தெரியாமல் மேற்குறிப்பிட்ட இலஞ்ச நபர்கள் தொற்று மூலங்களாக மாறுகின்ற பரிதாப நிலையுமாகும்.
பாலியல் இலஞ்சத்தினை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள்?
மானிடப் பாலுணர்வானது சிற்றின்ப அனுபவங்கள் முதல் பேரின்ப பாலுணர்வு நடத்தைகள் வரையிலான பரந்துபட்ட பாலுணர்வு வேடங்களின் தொகுப்பாகும். 
தனிப்பட்ட மனிதனின் பாலுணர்வு வேட்கையானது அவருக்குள்ளேயே ஊற்றெடுக்கும் அகக் காரணிகளாலும் அவர் மீது பிறரின் செல்வாக்கினால் தூண்டப்படுகின்ற புறக்காரணிகளினாலும் நெறிப்படுத்தப்படும்.
பாலியல் தூண்டல்களுக்கான துலங்கல்கள் அவற்றின் நோக்கம், இடம், சூழ்நிலை, காலம், விளைவுகள் மற்றும் வயது போன்ற தனித்துவ தனிமனித ஒழுக்கக் காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டும் நெறிப்படுத்தப்பட்டும் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.
பாலுணர்வுப் பிறழ்வுக்குட்பட்டவர்களின் பொது அபாயக்காரணிகளையும் தனித்துவக்காரணிகளையும் அடையாளப்படுத்தி அவற்றை அகற்றுவதற்கான முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிநிலை தடுப்பு முறைகளையும் பரிந்துரைப்பதன் மூலமே பாலியல் சேவைகளின் பஞ்சத்தினை நீக்கி பாலியல் இலஞ்சத்தினையும் முற்று முழுதாக இல்லாதொழிக்கலாம்.
முற்றும். 
Dr.  கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.