மண்டூர் முருகன் கோயிலை மையப்படுத்திய வேளாளர் குடியேற்றம்

(கலாநிதி சி. சந்திரசேகரம்)  2015.05.26 அன்று மண்டூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த சமூகசேவை உத்தியோகத்தர் சச்சுதானந்தம் மதிதயன் அவர்கள் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். தேடலும் தான் கற்றவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் உயர் பண்பும்
மற்றவரின் நலன்கள் மேல் அக்கறை கொள்ளும் மனப்பாங்கும் கொண்டிருந்த அவர் தன் பதவிப் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு சமூக சேவையாளனாகவும் செயற்பட்டுவந்தார். அவரது ஓராண்டு நினைவுதினமான இன்று (26.05.2016) அவர் சார்ந்த வேளாள குழுமத்தினரின் மண்டூர் குடியேற்றம் தொடர்பான சில வரலாற்றுக் குறிப்புகள் இக்கட்டுரையில் தரப்படுகின்றன. இக்கட்டுரை அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது.

கிழக்கிலங்கையின் சனவேற்றத்தில் தென்னிந்திய- குறிப்பாக சோழக் குடியேற்றங்களுக்கு முதன்மைப் பங்குண்டு. அவர்களின் குடியேற்ற வடிவம் கிழக்கின் சமூக அமைப்பினைப் பெருமளவு நிர்ணயித்துள்ளது. இக்குடியேற்ற மாதிரி சாதியப் படிமுறை அமைப்பைப் பேணுவதும் கோயிலை மையப்படுத்தியதுமான விவசாயக் குடியேற்றமாக அமைந்தது. திருக்கோயில், வீரமுனை, கொக்கட்டிச் சோலை, திருகோணமலை, பொலன்னறுவை ஆகியன கிழக்கில் சோழரின் குடியேற்ற மையங்களாக இருந்துள்ளன. அதேவேளை பிற்பட்ட காலங்களில் இக்குடியேற்ற மையங்களில் இருந்து நிகழ்ந்த உப குடியேற்றங்கள், குடிப்பரம்பல்களும் சோழரின் இத்தகைய குடியேற்ற வடிவத்தையே பின்பற்றியனவாக இருந்தன. இத்தகையதொரு உபகுடியேற்றப் பிரதேசமாகவே மண்டூர் என்ற பழங்கிராமம் அமைந்தது.

மட்டக்களப்பு படுவான்கரையின் தென்புறத்தில் வாவிக்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு விவசாயக் கிராமம் மண்டூர். சாதிமுறை உட்பட பல்வேறு பழைய மரபுகளையும் இன்றும் பேணுகின்ற பாரம்பரியமான கிராமம். இக்கிராமத்தின் குடியேற்றம் என்பது இங்கு அமைந்துள்ள முருகன் ஆலயத்தை (திருப்படைக் கோயில்) மையப்படுத்திய குடியேற்றமாகவே அமைந்தது. குறிப்பாக இங்கு அதிகார அடைவில் மேல்நிலை பெற்றவர்களாகவும் பெரும்பான்மையினராகவும் வாழும் வேளாளர், சீர்பாதர் ஆகிய சாதிக் குழுமங்களது குடியேற்றங்கள் இந்த ஆலயத்தை மையப்படுத்தியே இடம்பெற்றுள்ளன. இந்த ஊரின் வரலாறு கோயிலின் வரலாறாய் ஆனது.

வேளாளரின் குடியேற்றம் பற்றி நோக்குமிடத்து இந்த மக்கள் மத்தியிலே வழங்கிவருகின்ற வாய்மொழிக் கதைகளும் ஏகாம்பரபிள்ளை வண்ணக்கரின் மகன் சிதம்பரப்பிள்ளை (புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் சகோதரன்) என்பவரால் தனது மாமனார் தம்பிமுத்து விதானையிடம் கேட்டறிந்த விடயங்கள் என 1932ஆம் ஆண்டு எழுதி வைத்துள்ள ஆவணமொன்றும் வேளாளரின் வரவு பற்றிய வலுவான தகவல்களைத் தருகின்றன. இவை திருக்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள கோரைக்களப்பு என்ற இடத்தில் இருந்து வேளாளர்கள் கோயில் பணிக்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகின்றன. சிதம்பரப்பிள்ளையால் எழுதப்பட்ட கையெழுத்து ஆவணம் இங்கு வழங்கும் வாய்மொழிக் கதைக்கு மாறுபடாதவகையில் ஆனால் பெயர் விபரங்களோடு பின்வருமாறு கூறுகின்றது:

அந்தக் காலத்தில் இக்கிராமம் காடடர்ந்த பகுதியாகவும் ஒரு சில வேடுவர்களுக்கு உறைவிடமாகவுமே இருந்ததாம். அக்காலம் இப்பகுதி நாதனைப் பகுதி என்னும் பேருடன் வேலப்பு வன்னிமை என்பவரினதும் முற்குகச் சாதியாரதும் ஆதிக்கத்தில் இருந்தது…  கோயிலைக் கட்டி முடித்ததும், வழிபடு தெய்வம் கதிர்காமத் தெய்வம் போல் காட்சியளிக்கத் தொடங்கியதும் ஏராளமானோர் வழிபாட்டுக்கு வரத்தொடங்கினர். இது கண்ட கப்புகனார் இக்கோயிலை கொக்கட்டிச்சோலை, கோயில்போரதீவு, களுவாஞ்சிகுடி முதலிய கிராமங்களிலுள்ள கோயில்களைப்போல் கவுத்தன்குடி வேளாளரை முன்னவராய் வைத்து நடத்தவேண்டுமென நினைத்து வேலப்பு வன்னிமையிடம் ஆலோசித்தார்… அப்போ களுவாஞ்சிகுடியில்தான் கவுத்தன்குடி வேளாளர் இருக்கிறார்கள் அவர்களைக் கேட்போமெனத் தீர்ந்து போய்க்கேட்டபோது அவர்கள் மேற்காட்டிய ஊர்களிலுள்ள தான்றோன்றியீசுரர் கோயில், சித்திரவேலாயுத கோயில் முதலியவற்றுக்கே பணியாற்ற ஆட்கள் போதாதிருப்பதால், இக்கோயில் பொறுப்பையும் ஏற்கமுடியாதெனக் கூறினர்.

அதன் பின் வன்னிமையவர்களும், முற்குகப் போடிமாரும் யோசித்து திருக்கோயிலுக்குப் பக்கலாய் கோரைக்களப்பு என்னும் ஊரில், கவுத்தன்குடி வேளாளர் இருப்பதாயறிந்து, அப்பகுதியிலுள்ள முற்குகப் போடிமாருக்கு ஒரு கடிதம் எழுதி, சில வேளாளக் குடும்பத்தை மண்டூர்க் கோயில் பொறுப்பேற்று நடத்துவதற்கு அனுப்பக் கூடுமோவெனக் கேட்டார்கள். அக்கடிதத்துக்கு அப்பகுதியிலுள்ள ஏழு முற்குகப் போடிமார் சேர்ந்து எழுதிய பதில் எப்படியெனில், நாதனையிலிருக்கும், வேலப்பு வன்னிமையவர்கட்கும் அப்பகுதி முற்குகப் போடிமார்களுக்கும் அறியத்தருவது நீங்கள் கேட்டுக்கொண்டபடி மண்டூர்க் கோயிலுக்காக ஒரு வேளாளக் குடும்பத்தை மாத்திரமே அனுப்பலாம், அவர்களுக்குப் பல வசதிகளெல்லாம் செய்துகொடுத்து, வீடுவாசல் காணிபூமிகள் யாவும் கொடுத்து கோயில் கருமங்களை நடத்தும்படி ஒழுங்கு செய்யவும் எழுதப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் அனுப்பப்பட்ட குடும்பத்துக்கு முற்குகப் போடிமாரே, தங்களுக்குடைய புங்கடிவெளி என்னும் நாற்பது ஏக்கர் விசாலமான காணியையும், வேளாளர் குடியிருப்புவளவு எனத் தற்போது பெயர் விளங்கும் வளவையும் கொடுத்து நிலைப்படுத்தி வைத்தார்கள். கோரைக்களப்பால் வந்த மனுஷியின் பெயர் குஞ்சிநாச்சி. இவரின் புருஷன் ஒரு செட்டி வேளாளன் (பெயர் தெரியாது). இவர்களுக்குப் பிள்ளைகள் ஆண் 3, பெண்3…பெண்கள் 1.கண்ணாத்தை, 2. உமையாத்தை, 3. பாலாத்தை. கண்ணாத்தையை விவாகம் செய்தவர் களுவாஞ்சிகுடியிலுள்ள சிங்களக்குடி வேளாளன்.- பரசிராமன் என்பவர் 2ம் பிள்ளை உமையாத்தையை விவாகஞ் செய்தவர் பழுகாமத்திலுள்ள வைத்தினா குடி வேளாளன் தம்பிப்போடி நொத்தாரிஸ். பரசிராமருக்குப் பிறந்த பிள்ளைகள், நாலு ஆண், நாலு பெண் (8) நொத்தாரிஸ் தம்பிப்போடியின் பிள்ளைகள் ஐந்து பெண், இரண்டு ஆண் (7) இந்த ஐந்து பெண்களில் ஒரு பெண் சின்னாத்தை என்பவவின் மகளின் மகன் ஏகாம்பரபிள்ளை வண்ணக்கர். கண்ணாத்தையின் மகன் - ஆறுமுக வண்ணக்கர், சிதம்பரப்பிள்ளை வண்ணக்கர். இவர்களின் மருமகன் வீரக்குட்டி வண்ணக்கர்.

அக்காலந்தொட்டு புங்கடி வெளி, செம்பர் பள்ளம் என்னும் காணிகளில் வரும் ஊதியத்தை 5ம் திருவிழாச் செலவு நீக்கி மிகுதியை கண்ணாத்தையின் மக்கள் எட்டுப் பேரும் உமையாத்தையின் மக்கள் ஏழு பேரும் பதினைந்து பங்காய்ப் பிரித்துக் கொள்வது. பாலாத்தை என்பவ சந்தானமில்லாமல் இறந்து போனா”.           
இன்று அக்காவின் (கண்ணாத்தை) வழியில் வந்தவர்கள் மண்டூர் கவுத்தன் குடி என்றும் தங்கை (உமையாத்தை) வழி வந்தவர்கள் பழுகாமத்துக் கவுத்தன் குடி என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களில் கண்ணாத்தைக்கு எட்டுப் பிள்ளைகளும் உமையாத்தைக்கு ஏழு பிள்ளைகளும் பிறந்ததாக மேற்படி ஆவணம் கூறுகின்றது. மொத்தம் 15 பிள்ளைகள். இவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் பதினைந்து பங்குகளாகப் பிரிக்கப்பட்டு எட்டிலொன்று, ஏழிலொன்று என்ற அடிப்படையில் இன்றும் அவ்வம்சவழியினரால் சுழற்சி முறை அடிப்படையில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. இந்தச் சந்ததித் தொடர்ச்சியைப் பின்வரும் வரைபடம் தெளிவாகக் காட்டுகின்றது.


 
நீண்ட வரலாற்றைக் கொண்ட மண்டூர் முருகன் கோயில் பெரிதாகக் கட்டப்பட்ட நிலையில் அக்கோயிலில் ஆட்சியாளரின் அங்கீகாரத்தையும் அவர்கள் ஊடான நிர்வாக ஒழுங்குகளையும் செய்யவேண்டும் என்ற பிரக்ஞை உருவானதை இந்த ஆவணம் காட்டுகின்றது. அரசனின் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதுதென்;பது அந்த ஆலயத்துக்குரிய உயர் மதிப்பாகக் கருதப்பட்டது. எனவேதான் அக்காலத் தேசத் தலைவர்களான வன்னிமைகளின் தொடர்பும் அவர்களின் பணிப்பகுப்பும் இவ்வாலயத்தில் இடம்பெற்றிருக்கின்றது. அவ்வாறு அவர்கள் பணிப் பகுப்பைச் செய்தபோது சோழர்களின் சாதி ஒழுங்கமைவை உட்கொண்டதான குடியேற்ற மரபைப் பின்பற்றியுள்ளனர். எனவேதான் மட்டக்களப்பில் கோயில் நிர்வாகத்திலே முன்னுரிமை பெற்றிருந்த வேளாளர்களைக் இக்கோயிலுடன் தொடர்புபடுத்தவும் குடியேற்றவுமான அவசியம் ஏற்பட்டதை மேற்படி ஆவணம் எடுத்துக்காட்டுகின்றது. இதனை வி.சீ.கந்தையாவின் பின்வரும் கூற்றின் ஊடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

அக்காலத்தில் மட்டக்களப்பின் கிழக்குப் பகுதிகளில் முக்குவ வன்னிமைகள் சிற்றரசாக இருந்தனரென்பது சரித்திரக் கூற்று. அன்னாருடைய அங்கீகாரமும் அதிகாரமும் பெற்றுக் கொள்ளுதல் பொதுத் தலங்களுக்கெல்லாம் நியதியும் சிறப்புமாக இருந்தமையால் அதன்படி தேசத் தலைவரான முக்குவ வன்னிமையின் தலைமையில் கோயிலமைப்பும் நிருவாக ஒழுங்குகளும் வகுக்கப் பெற்றன என்பர். அன்னாரால் பல மானியங்களும் கோயிற் பரிபாலனத்துக்காக வழங்கப் பெற்றிருக்கின்றன. அவர்களின் திட்டப்படி பெரிய கவுத்தன்குடி வேளாளர் குலத்தினர் கோயிற் பரிபாலனத்துக்காக மண்டூரில் குடியேற்றப்பட்டனர்;; (கந்தையா,வி.சீ., 1983:66)

மேலும், கலிங்க வேளாளர் என்ற சாதியினர் திருக்கோயில் பணிக்கென்றே முதலில் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கோரைக்களப்பு என்ற இடத்தில் (திருக்கோயில் பிரதேசம்) குடியேற்றப்பட்டிருந்தனர் என்றும் வி.சீ.கந்தையா கூறுவார் (மேலது,435). எனவே திருக்கோயிலை மையப்படுத்திய சோழ குடியேற்றப் பகுதியில் இருந்து மண்டூர் கோயிலை மையப்படுத்திய உபகுடியேற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை இக்குடியேற்றம் நடைபெற்ற காலப்பகுதியைக் காண்பதும் அவசியமாகும்.

மேலே கூறிய ஆவணமும் வி.சீ.கந்தையாவின் மேற்படி கூற்றும் இக்குடியேற்றம் முக்குவ வன்னிமைக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறுகின்றன. அவ்வாறெனில் மட்டக்களப்பு முக்குவருக்கு வன்னிமைப் பட்டத்தினை கண்டி அரசனே வழங்கியதாக குகன்முறை அகவல் கூறுகின்றது. 1582 ஆம் ஆண்டிற்குப் பின்னரே மட்டக்களப்பு கண்டி ராட்சியத்தின் கீழ் வந்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது (சிவராம். டீ., 2004:68-69).

அடுத்து இந்த ஆவணத்திலே இடம்பெற்றுள்ள நொத்தாரிஸ் என்ற பதவிப் பெயரும் இந்தக் காலத்தை நிர்ணயம் செய்வதற்கு நமக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. இப்பெயர் ஒரு டச்சு மொழிச் (ஒல்லாந்தர்) சொல்லாகும். ஈழத்தில் ஒல்லாந்தரின்; ஆட்சி 1638 இல் இருந்து தொடங்குகின்றது.

மூன்றாவது விடயம் மேற்படி ஆவணம் கூறும் சந்ததித் தொடர்ச்சி ஊடான காலக் கணிப்பீட்டினைச் செய்யுமிடத்தும் இந்தக் காலக் கணிப்பைச் செய்யமுடியும். இந்தச் சந்ததித் தொடர்ச்சியில் இறுதியில் வருகின்ற ஏகாம்பரபிள்ளை வண்ணக்கர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் தந்தையாவார். புலவர்மணி 1899 இல் பிறந்தார். எனவே புலவர்மணியில் இருந்து மேல்நோக்கி சந்ததிகளுக்கிடையிலான (இரு சந்ததிகளுக்கிடையிலான கால அளவு வரலாற்றாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது) காலக்கணிப்பின் ஊடாக வேளாளர் குழுமத்தின் வரவைக் கணிப்பிட முடியும்.

ஆகவே கண்டி ராச்சியத்தின் கீழ் மட்டக்களப்பு இருந்த காலப்பகுதியிலும் சோழரின் கோயிலை மையப்படுத்தியதும் சாதி ஒழுங்கமைவை உட்கொண்டதுமான குடியேற்ற மரபே பின்பற்றப்பட்டுள்ளது என்பதற்கு மண்டூரில் இடம்பெற்ற வேளாளரின் குடியேற்றம் ஒரு எடுத்துக்காட்டாகும். 

கட்டுரை 
கலாநிதி சி. சந்திரசேகரம்,

உசாத்துணை:
1. கந்தையா,வி.சீ.,1983,மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி யாழ்ப்பாணம், 
2. சிதம்பரப்பிள்ளை என்பவர் தம்பிமுத்து விதானையிடம் கேட்டறிந்த விடயங்கள் என 24.09.1932 இல் எழுதப்பட்ட ஆவணம். 
3. சிவராம். டீ., 2004, மட்டக்களப்பு குடியேற்ற மரபுகள், சித்திரலேகா மௌனகுரு (பதி), வாய்மொழி மரபுகள் வரலாற்று மூலங்களாக, மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்,