ஆயிரக்கணக்கான மாணவச் செல்வங்கள் கண்ணீர் மல்க சேவையின் சிகரமாய் திகழ்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அமரர் பேரானந்தத்திற்கு மலரஞ்சலி


(சிவம்)

சேவைக்கு இலக்கணமாய் திகழ்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அமரர் மா. பேரானந்தத்திற்கு ஆயிரக்கணக்கான மாணவச் செல்வங்கள் கண்ணீர் மல்க கண்ணீர் அஞ்சலி மற்றும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (26) மாலை இடம்பெற்றது.

பெரிய கல்லாற்றில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி, இறுதி மரியாதை மற்றும் இரங்கலுரைகள் இடம்பெற்றன.
அரசியல் பிரமுவர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆலய மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் இரங்கலுரையாற்றினர்.

இரங்கலுரையைத்; தொடர்ந்து அவரது உடலத்தை தாங்கிய பேழை ஊர்வலமாக மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக மோட்டார் சயிக்கிள் பவனியாக ஓந்தாச்சிமடம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு வித்திட்ட கல்விமானின் உடலத்தை ஓந்தாச்சிமடம் பாலத்தில் வைத்து கிராம மக்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் தமிழ்ப்
பாரம்பரிய பரிய பறை மேளம் சகிதம் பிரேத வாகனத்தில் உள்ள உடலத்தை சுமந்து ஊர்வலமாக இறுதி மரியாதை செலுத்துவதற்காக பாடசாலை வளாகம் நோக்கி கொண்டு சென்றனர்.

பாடசாலையின் வளாகத்தில் கூடியிருந்த பொது மக்கள் மற்றும் மாணவர்களின் மலரஞ்சலியைத் தொடர்ந்து அமரர் பேரானந்தம் பாடசாலைக்கு இயற்றிய பாமாலையை மாணவர்கள் பாடி மரியாதை மற்றும் கௌரவம் செலுத்தியதைத் தொடர்ந்து இரங்கலுரைகள் இடம்பெற்றன.

இறுதியாக அவரது உடலம் வைக்கப்பட்டிருந்த பேழைக்கு பாடசாலையின் கொடியை போர்த்தி அதி உயர் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உடலம் நல்லடக்கத்திற்காக ஊர்வலமாக மீண்டும் பெரியகல்லாறு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.