மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் ஓளவையாரின் உருவச்சிலை நிர்மாணப் பணிகள் பூர்த்தி


-(சிவம்)

மனித குலத்திற்கு நல்ல பல விழுமியக் கருத்துக்களை அழகு தமிழில் தந்த சங்ககால பெண் புலவர் ஓளவையாரின் உருவச்சிலையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிவரும் சனிக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு திறப்பு விழா இடம்பெறும்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் வேல்முருகன் குடும்பத்தினரின் 40 வருட வர்த்தக சேவையின் பூர்த்தியை முன்னிட்டு சண்பன்சி ஹவுஸ் உரிமையாளர் சண்முகம் சிவபாதசுந்தரத்தின் அனுசரணையில் புதிய மற்றும் பழைய மீன்பாடும் கல்லடிப் பாலம் அருகில் 7 அடி உயரமான ஓளவையார் சிலை ரூபாய் 750,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவின்போது ஓளவையாரின் ஆத்தி சூடி நூல் ஆங்கில் மொழிபெயர்ப்புடன் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தேசபந்து மு. செல்வராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன் கௌரவ அதிதிகளாகவும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் சிறப்பு அதிதிகளாகவும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராசா, கிழக்கு மாகாண வீதி அபிவிரத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் யோ.. தர்மரத்தினம் , மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் எம். கணேசராஜா விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.