பாடசாலைகளினை நண்பகல் 12 மணிக்கு மூட வேண்டாம்

நாட்டில் நிலவுகின்ற அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண அரச பாடசாலைகள் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு மாகாண கல்வியமைச்சுக்களால் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு சிரமங்களினை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.


ஆனால் கல்வியமைச்சினால், நேற்று (03) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பாடசாலைகளினை நண்பகல் 12 மணிக்கு மூட வேண்டாம் என மாகாண கல்வி அமைச்சுக்களை கோரியுள்ளது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த குழுவின் அறிக்ககையில், காலை 11.30 தொடக்கம் நண்பகல் 1.30 மணியான காலப்பகுதிதான் அதிக உஷ்ணம் நிறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணிக்கு பாடசாலைகளை மூடுவதால் மாணவர்கள் எந்த நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக நேரகாலத்துடன் வீடு செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களோ அது நிறைவேறாமல் விடுவதோடு பல்வேறு சுகாதார தாக்கங்களுக்கும் உள்ளாக நேரிடும் என கல்வியமைச்சு எச்சரித்துள்ளது.

எனவே, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன அடங்கிய குழுவின் சிபாரிசுகளான பாடசாலை மாணவர்களினை அதிகமாக தூய நீரை பருகுவதற்கு ஏற்பாடு செய்தல், வகுப்பறைகளை காற்றோட்டமுள்ளதாக மாற்றுதல், மாணவர்கள் வெளியில் நடமாடுவதை முற்றாக தடுத்தல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

12 மணிக்கு பாடசாலை விடுவதால் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், வாகன சாரதிகள் என பலரும் பல்வேறு சுகாதார பாதிப்புக்களுக்குள்ளாக நேரிடும் என்பதாலும், மத்திய அரசு, நண்பகல் 12 மணிக்கு பாடசாலைகளை மூட வேண்டாம் எனவும், மாகாண அமைச்சுக்கள் 12 மணிக்கு மூடுவதற்கு அதிபர்களினை பணித்திருப்பதனாலும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால 12 மணிக்கு மூடுவதற்கு சிபாரிசு வழங்கியிருப்பதும் பாடசாலைகளை மூடுவதா இல்லையா என அதிபர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் நிலை குழம்பிப் போயுள்ளனர்.

எனவே இதுவிடயத்தில் மத்திய மற்றும் மாகாண கல்வியமைச்சுக்கள் உறுதியான தீர்மானத்தினை உடனடியாக அறியத்தர வேண்டும் என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.