அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் நாட்டில் இருக்கின்ற ஒரு சில பேரினவாதிகளும் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.

(படுவான் பாலகன்)  தமிழ்மக்களது நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கின்றோம். ஆனால் இன்றும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள்ளும், வெளியிலும் இருந்து கொண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்து, சின்னாபின்னாமாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான இராஜதந்திர நகர்வை இன்றிருக்கின்ற அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் நாட்டில் இருக்கின்ற ஒரு சில பேரினவாதிகளும் கட்சியமாக செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுமானால் போராட்டத்தில் நாம் அடைய முடியாததை இந்த அரசியல் பயணத்திலும் பெறமுடியாமல் போய்விடுவோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று(26) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற படுவான் சமர் இறுதிப்போட்டி நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.



பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், கொக்கட்டிச்சோலை ஒரு வர்த்தக நிலையமாக மக்களை கவர்த்தெடுக்க கூடிய தளமாக இன்னும் 10வருடங்களுக்குள் பெரு நகரமாக வளரும்.  நாங்கள் யார்? தமிழர்கள் யார்? என்று கேள்வியை கேட்டால் அழிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள், ஒழிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள், காணாமல் செய்யப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளாக தமிழர்கள் இருக்கின்றோம். மூன்று தசாப்த கால யுத்தத்தில் உரிமைக்காக உயிரை, உடலை, இழக்ககூடாத அனைத்தையும் இழந்திருக்கின்றோம். 

தற்போதைய அரசை கொண்டு வந்ததில் வடகிழக்கு மக்களாகிய தமிழ் மக்களுக்கு காத்திரமான பங்களிப்பு இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இன்றைய அரசு ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்திருக்கின்றது. மூன்று விடயங்களை முன்வைத்து அரசியலமைப்பு யாப்பை திருத்துவதற்கு முன்வந்துள்ளது. அவையாவன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறையை மாற்றியமைப்பது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டு வருவது போன்றனவாகும். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமும், தமிழ்தேசிய கூட்டமைப்பும் சிறப்பான முறையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுடைய ஒரு குரலாக, பொருளாக இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு. 

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்காக, சிதைப்பதற்காக பலர் தேர்தலுக்கு முன்பு செயற்பட்டார்கள் அவ்வாறு செயற்பட்டவர்களின் நிலை தற்போது என்ன என்பதை அறிவீர்கள். ஆனால் இன்று வடகிழக்கு மக்களுடைய வாக்கு பலத்தால் 16ஆசனங்களோடு எதிர்கட்சி தலைமையையும் பெற்றுக்கொண்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலமைப்பு மாற்றத்திலே மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒற்றுமையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

தமிழர்களது வரலாறுகளை மீண்டிப்பார்க்கும் போது சங்ககாலத்திலே சேர, சோழர்கள் ஒற்றுமையாக இருந்தபோது எத்தனையோ நாடுகள் தமிழ் நாட்டை கைப்பற்றுவதற்கு அஞ்சியது.  சேர, சோழர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் வந்தபோது தமிழ்நாட்டை வடநாட்டவர்கள் இலகுவாக கைப்பற்றிக் கொண்டனர். போராட்டத்திலும் சரி ஒற்றுமையினமும் கருத்து முரண்பாடுகளும் போராட்டத்தை வெற்றிபெற முடியாத சூழலுக்கு கொண்டு சென்றது. இந்த நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் ஒரு தீர்வு திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வடகிழக்கிலே உள்ள அனைத்து தமிழ்மக்களும் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றார்.