மிச்நகரில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்

மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிச்நகரில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவுமாறு அந்தப் பகுதியின்  மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வேண்டுகோள்களை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீமுகா நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோருக்கு திங்கட்கிழமை (ஜுன் 27, 2016) அனுப்பி வைத்துள்ளதாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கச் செயலாளர் ஏ.எச். ஆமினா உம்மா தெரிவித்தார்.


அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிச்நகர் கிராம மக்கள் கடந்தகால போரினாலும் மற்றும் வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை அழிவுகளினாலும் தொடர்ந்தேர்ச்சையாகப் பாதிக்கப்பட்டு வருபவர்கள்.

அதனால், விதகைள், அநாதைகள், வீடற்றவர்களும், நிரந்தர வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுமாக இந்தக் கிராமத்தில் அதிகம் வறுமைக்குள்ளானவர்களே வாழ்கின்றார்கள்.

இப்பொழுது புனித றமழான் நோன்பும் அனுஷ்டிக்கப்படுவதால் இந்தக் கிராமத்து மக்களுக்கான உதவி அத்தியாவசியமாகின்றது. எனவே, உலருணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிச்நகர்  கிராமத்தில் 248 விதவைகளும், 78 அநாதைகள் உட்பட 216 வீடற்ற குடும்பங்களும் உள்ளதாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கச் செயலாளர் ஏ.எச். ஆமினா உம்மா மேலும் தெரிவித்தார்.