பின்தங்கிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஓரிரு மாதங்களே கடமையாற்றினர் : செல்வாக்கினால் இடமாற்றபட்டார்கள்

(படுவான் பாலகன்) கடந்த காலங்களிலே பின்தங்கிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஓரிரு மாதங்களே கடமையாற்றி தமக்கிருந்த செல்வாக்கினை பயன்படுத்தி தமக்கு வசதியான பாடசாலைக்கு  இடமாற்றம் பெற்று சென்ற செயற்பாடுகள் இடம்பெற்றதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடத்தினை வியாழக்கிழமை (28) திறந்து வைத்து பேசுகையிலே இதனை குறிப்பிட்டார்.

மாகாண அமைச்சர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், 

கடந்த காலங்களில் முறையற்ற கல்வி நிருவாகசேவை நடைபெற்றது. முறைமையான கல்விநிருவாகத்தினை புறக்கணித்து அரசியல் வாதிகளுக்கு தாளம்போடுகின்ற, அவர்கள் சொல்வதையே செய்கின்ற காலம் இருந்தது. அச்சூழலில் இருந்து விடுபட்டு தற்போது கல்வி நிருவாகத்தினை சீராக கொண்டு செல்கின்றோம். கிழக்கு மாகாணத்திலே வெற்றிடங்கள் காணப்பட்ட போது கடந்த காலங்களில் ஆசிரியர் நியமனங்கள் பெரியளவில் வழங்கப்பட்டது. இவ்வாறான நியமனங்கள் எவ்வாறு வழங்கப்பட்டது என்றால் பின்தங்கிய பிரதேசங்களுக்கு புதிய நியமனத்தின் போது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இரண்டு மாதம் அல்லது ஒரு மாதகாலங்கள்தான் நியமிக்கப்படும் பாடசாலையில் கடமையாற்றுவார். அதன்பின் அவர் தமக்கு உகந்த அரசியல்வாதியின் செல்வாக்கு காரணமாக அவர்கள் இடமாற்றம் பெற்றுக்கொண்டு சென்ற பல செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றது. இதனால்தான் பின்தங்கிய பிரதேசங்களின் வெற்றிடங்களும், பிரச்சினைகளும் இருந்துகொண்டிருந்தது. தற்போது எல்லாவற்றையும் கட்டுப்படுத்தியிருக்கின்றோம். அநாவசியமாக செல்வாக்குக்கு உட்படும் இடமாற்றங்களை நிறுத்தியிருக்கின்றோம் என்றார்.