தாயைக் கொலை செய்த மகனுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனைப் பிரதேசத்தில் தாயை அடித்துக் கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மகனுக்கு 08 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கல்முனை மேல் நீதிமன்றத்தில்; வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதவான் எம்.இளஞ்செழியன் விதித்து நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 

சம்மாந்துறை சொறிக்கல்முனை பிரதேசத்தில் 2010.04.11 அன்று தாயை பொல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது சம்மாந்துறை பொலிஸாரினால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.   


இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக 2012.06.29 அன்று சட்ட மா அதிபரினால், சந்தேக நபர் மீது கல்முனை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   

சொறிக்கல்முனையைச் சேர்ந்த மயில்வாகனம் சாரதாதேவி (வயது-55) என்பவரே கொலை செய்யப்பட்டவராவர். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் எம்.இளஞ்செழியன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவந்த காலப்பகுதியில் இவ்வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவ்வேளையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

 நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (29) வெள்ளிக்கிழமை இவ்வழக்கின் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.