இந்திய வீட்டுத்திட்டத்தின் ஒரு தொகுதி கிரான் பாலையடித் தோணாவில் பயனாளிகளிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகப்பிரிவின் பாலயடித்தோணா பிரதேசத்தில்; நிருமாணிக்கப்பட்ட அமைக்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தின் ஒரு தொகுதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்த டெல்லியிலுள்ள இந்திய தூதரகத்தின்  இணைச் செயலாளர் அஜித் குப்தே தலைமையிலான குழுவினரால் இந்திய வீட்டுத்திட்டத்தின் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டெல்லியிலுள்ள இந்திய தூதரகத்தின்  இணைச் செயலாளர் அஜித் குப்தே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரேம் நாயர், கீர்திதி ஷா, வர்மா உள்ளிட்ட அதிகாரிகளும், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


அத்துடன், இந்திய வீட்டுத்திட்டத்தின் வீடமைப்புகளுக்காக பங்காளியாகச் செயற்பட்ட ஹபிராட்- மனுக்குலத்துக்கான வீடமைப்பு நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தினேஸ் கனகரெட்ணம், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஹபிராட் நிறுவன உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நிய அரசாங்கத்தின் உதவியுடன் 49 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் நிருமாணிக்கப்பட்ட 4000 வீடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,880 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 2168 குடும்பங்களுக்கும், வன்னியிலிருந்து அகதிகளாக இருந்து வந்த 697 குடும்பங்களுக்கும், இந்தியாவில் அகதிகளாக தங்கியிருந்த 15 குடும்பங்களும், ஏனைய கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 1625 குடும்பங்களும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு-கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட 318 வீடுகளில் பாலையடித்தோனா கிராமத்தில் நிருமாணிக்கப்பட்ட 15 வீடுகள் இதுவரை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. பயனாளிகளின் ஒத்துழைப்புடன் ஒரு வீட்டினை அமைக்க  ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவிடப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட பாலையடித்தோயா கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டதுடன், அத்திட்டத்தின் நிறைவு சம்பந்தமாகவும், பயனாளிகளது திருப்தி தொடர்பாகவும் மக்களிடம் கலந்துரையாடி குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்துக்கென 4000 வீடுகள் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தில் ஒதுக்கப்பட்டாலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தொடர்ச்சியான முயற்சிகளால் 2880 வீடுகள் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டு வசதிகள் அற்ற மக்களுக்கு தொடர்ந்தும் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் மேலதிகமாக 500 வீடுகளை இந்திய அரசாங்கம் தமது மாவட்டத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் அரசாங்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு தொகுதி வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.