பிரத்தியோக இலவச கணித பாடவகுப்பு ஆரம்பித்தல்

மட்டக்களப்பு விவேகானந்தா தொழில் நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற பயிலுனர்களால் உருவாக்கப்பட்ட “விவேகானந்தா இளைஞர்அணி” தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் முக்கியமாக “மாணவர்களின்மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்கின்ற கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.


பாடசாலை மற்றும் பல்கலைக் கழகத்தில் பயிலும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவியினை எமது புலம் பெயர் உறவுகளின் உதவி மூலமாக செய்து வருகின்றனர். அத்தோடு எழுதுதல் வாசித்தல் தொடர்பில் இடர்படுவோருக்கான மேலதிக வகுப்புக்களையும் நடாத்துகின்றனர்.

மட்டக்களப்பின் எல்லைப் பகுதியில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் உள்ள பாடசாலையில் கணிதபாட ஆசிரியர் பற்றாக்குறையால் அங்கு க.பொ.த சாதாரணதரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் கணிதபாடத்தில் சித்தியடையாமையால் அவர்கள் க.பொ.த உயர்தரகல்வியினை தொடர்வதில் பின்னடைவினை எதிர்நோக்கு கின்றனர்.

இந்தபிரச்சினையினை கருத்தில்கொண்ட விவேகானந்தா இளைஞர் அணியினர் அந்தகிராமத்தில் பிரத்தியோக கணிதபாட கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்த முன்வந்தனர்.

அதற்காக முதற்கட்டமாக இம்முறை க.பொ.தசாதாரணதரம் பயிலும் மாணவர்களிற்கு வருகின்ற நான்கு மாதங்களுக்கும் இலவசமாக பயிற்சிவகுப்பினை நடாத்த கனடாவில் வசிக்கும் முருகேசு விசாகன் அவர்கள் நிதி உதவியினை வழங்கியுள்ளார்.

அதன் பிரகாரம் இதனைஆரம்பித்து வைக்கும் நோக்கில் மாணவர்கள், பெற்றோருடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை மாலை  (28) நடைபெற்றது.

இதில் எதிர்வரும் சனிக்கிழமை  (30) பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிப்பது என்றும், இதற்காக கிராமத்தின் சார்பாக வள்ளுவர் சனசமூக நிலைய நிருவாகம் ஒருங்கிணைந்து செயற்படுவது எனவும், அயல் கிராமங்களான ஆனைகட்டிவெளி, மாளியர்கட்டு கிராமத்தில் உள்ள மாதுணவர்களையும் இணைத்துக்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட்டன .

இவ்வாறு கிராமங்கள் தோறும் உள்ள இளைஞர்கள் தங்களின் கிராமத்தின் அவசிய தேவையினை இனங்கண்டு அவற்றினை நடைமுறைப்படுத்த முன்வரும் பட்சத்தில் உதவிவழங்க பல நல்உள்ளங்கள் முன்வருவார்கள் மட்டக்களப்பு விவேகானந்தா தொழில் நுட்பவியல் கல்லூரி நிருவாகம் தெரிவிக்கின்றது.