கல்வி பயன்பாட்டிற்கென பெருந்தொகையான நிதிகள் மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது – அவை திரும்பிச் செல்லாமல் திட்டங்களை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கத்தினாலும், மாகாணசபையினாலும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களினாலும், உள்நாட்டு அமைப்புக்களினாலும் பெருந்தொகையான நிதிகள் பல்வேறு திட்டங்கள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிதிகளை ஏற்ற கல்வி அமைச்சு விரைவாகவும், சரியாகவும் திட்டங்களை அமுல்படுத்தவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலைக்குடா மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெவித்தார்.

 மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் இது தொடர்பில் குறிப்பிடுகையில், இந்தவருடம் முடிவடைவதற்கு இன்னும் ஐந்து  மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அவ்வாறு குறித்தொதுக்கப்பட்ட நிதிகள் திரும்பி செல்லாமல் இருப்பதற்காக வேண்டி உடனடியாக இந்த வருடத்திற்குள்ளே திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். இதற்காக கல்வி அமைச்சிலும், திணைக்களங்களிலும் இருக்கின்ற குறைகளை கண்டறிந்து விரைவாக வேலைகளை மேல்கொள்வதற்கு ஆளணிகளை அதிகரித்து செயற்பட வேண்டும். அவ்வாறு நிதிகள் இவ்வருடம் பயன்படுத்தப்படாமல் திரும்பி செல்லுமாகவிருந்தால் இதற்கான முழுப்பொறுப்பையும் கிழக்கு மாகாணசபை நிருவாகமே ஏற்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.