பச்சிளங்குழந்தை உட்பட மூவர் படுகொலை ! நடந்தது என்ன ? முழு விபரம்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


காக்காச்சிவெட்டை 1ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலேயே, இந்தத் துயரச்சம்பவம், சனிக்கிழமை (23) நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

 படுகொலை செய்யப்பட்டவர்களில், ஒரு வயதும் 6 மாதங்களுமேயான பிரசாந்தன் சஸ்னிகாவும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா (வயது 24) என்பவரும், வீட்டு வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஞாயிற்றுக்கிழமை காலை, சடலங்களாக மீட்கப்பட்டனர்.

பேரின்பம் விஜித்தாவின் தந்தையான கந்தையா பேரின்பம் (வயது 56), கடும் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய்க் கிடந்த நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு எடுத்துச் செல்லும் போதே உயிரிழந்துவிட்டார் என்று அறியமுடிகின்றது.

சம்பவத்தினால், வீட்டின் சமையலறை உள்ளிட்ட அறைகள் இரத்தினால் தோய்ந்து இருந்தன. கிணற்றில், நீரில்லாத பகுதிகளில், ஆங்காங்கே இரத்தக்கறைகள் படிந்திருந்தன. பாலகியினதும் தாயினதும் சடலங்கள், குப்புறக் கவிழ்ந்த நிலையில் கிணற்றுக்குள் மிதந்துகொண்டிருந்தன.

ஸ்தலத்துக்கு மோப்ப நாயுடன் சென்றிருந்த மட்டக்களப்பு குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள், சுமார் ஒன்றை மணிநேரத்துக்குள், கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பேரின்பம் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) என்பவரைக் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது தந்தையின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்துக்கு அப்பால் வசித்துவந்த பிரசாந்தனைத் திருமணம் முடித்த விஜித்தா, தன்னுடைய தந்தையின் வீட்டிலேயே, பிரசாந்தனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இருவருக்கும் முதலாவது குழந்தையொன்று பிறந்து இறந்துள்ளது. இந்நிலையிலேயே இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு, பிரசாந்தன் சஸ்னிகா என்று பெயரிட்டுள்ளனர். இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

சண்டை போட்டுவிட்டு பிரசாந்தன் தலைமறைவாகிவிடுவதுடன், குடும்பத்துடன் சில நாட்களுக்கு தொடர்பைப் பேணுவதே இல்லை என்றும் அறியமுடிகின்றது. இரண்டாவது குழந்தையின் பிறப்பில் சந்தேகம் கொண்டே, பிரசாந்தன் தன்னுடைய மனைவியுடன் ஒவ்வொருநாளும் சண்டையிட்டுள்ளார்.

மதுபோதையில் வரும் அவர், சில நாட்களில் மனைவியையும், ஏன், குழந்தையும் கூட கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார் என்றும் அறியமுடிகிறது.

 கணவனின் கட்டுக்கடங்காத செயற்பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜித்தா, இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் இவ்விருவரையும் கடந்த 22ஆம் திகதியன்று அழைத்த பொலிஸார், விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரசாந்தனின் அட்டகாசமும் கொடுமைகளும் தாங்கிக்கொள்ள முடியாதவை என்பதனால், அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாது என்றும் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், மனைவியான விஜித்தா,பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், விஜித்தாவுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு விருப்பம் என்று, பிரசாந்தன் அன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இவ்விருவரும் கலந்துபேசி, 28ஆம் திகதியன்று (எதிர்வரும் வியாழக்கிழமை) அறிவிக்குமாறு சமரசம் செய்து, இவ்விருவரையும் அவரவரின் வீடுகளுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.

கணவனின் அச்சுறுத்தல் காரணமாக, பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்களை, பாதுகாப்புக்காக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து தங்க வைப்பதை விஜித்தா வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

சம்பவ தினமான சனிக்கிழமையும் (23), அவ்வாறே இரண்டொரு பெண்கள், விஜித்தாவின் வீட்டில் உறங்குவதற்காக வந்துள்ளனர். தந்தையான பேரின்பம், அருகிலுள்ள மற்றொரு வீட்டில் உறங்குவதற்காகச் சென்றுவிட்டார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் விஜித்தாவின் அலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய பிரசாந்தன், தான் இன்றிரவு வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அச்சேதியைக் கேட்டு, பாதுகாப்புக்காக வந்திருந்த பெண்களை அவர்களுடைய வீட்டுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, விஜித்தா காத்திருந்துள்ளார். சுமார் 10 மணியளவில் நிறைபோதையில் வந்த பிரசாந்தன், 'நாமிருவரும் இணைவதா, இல்லையா என்பது தொடர்பில், இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தான் முடிவு தெரியும்' என்று கூறியுள்ளார்.

வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இவற்றையெல்லாம், அக்கம் பக்கத்து வீட்டார் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில், அவ்வீட்டில் மயான அமைதி நிலவியுள்ளது. அப்படியாயின் அவ்விருவரும் சமாதானமாகச் சென்றுவிட்டனர் என்று எண்ணிய தாங்கள், நித்திரைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.

 சுமார் 12 மணியளவில், தன்னுடைய வீட்டுக்கிணற்றில், தொம்... தொம்... என்று பாரமான பொருட்கள் விழும் சத்தம், பக்கத்து வீட்டில் படுத்திருந்த கந்தையா பேரின்பத்தின் காதுகளுக்குக் கேட்டுள்ளது. சத்தத்தில் சந்தேகம் கொண்ட அவர், தன்னுடைய வீட்டை நோக்கி ஓடியுள்ளார்.

அங்கு கோடரியுடன் நின்றுகொண்டிருந்த மருமகனான பிரசாந்தன், அவரையும் கொத்து கொத்தென்று கொத்திவிட்டு, ஆயுதத்துடன் தப்பியோடியுள்ளார். அவரின் அபயக்குரல் கேட்டு ஓடோடிவந்த அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள், இரத்தம் ஒழுக ஒழுக அவரை ஆட்டோவில் ஏற்றி, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

போகும்வழியிலேயே, அவர் தனக்கு நேர்ந்ததை புட்டுப்புட்டு வைத்து, மரண வாக்குமூலத்தையும் அளித்து விட்டார். எனினும், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்படும் போது, அவர் இறுதி மூச்சை விட்டுவிட்டார்.

இந்நிலையிலேயே இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்துகொண்டிருந்த சடலங்கள் தொடர்பில் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

எனினும், கொலைகளைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படும் பிரசாந்தனும், தனக்கு எதுவுமே தெரியாதது போல கூட்டத்தோடு கூட்டமாக நின்று, நடப்பதை அவதானித்து கொண்டிருந்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர். அங்கிருந்த பெண்கள் அழுதழுது துவண்டுவிழுந்தனர். குற்றுயிராய்க் கிடந்த கந்தையா பேரின்பம், இறுதியாகக் கூறியதை முச்சக்கரவண்டியில் சென்றோர், பொலிஸாரின் காதுகளுக்குக் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், இரத்தம் தோய்ந்திருந்த தலையணையை நுகர்ந்த மோப்பநாய், பிரசாந்தன் நின்றுகொண்டிருந்த இடத்துக்குச் சென்று, அவர்மீது தாவியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்த வெல்லாவெளிப் பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், களுவாஞ்சிகுடி நீதவான் யு.எல்.எம். றிஸ்வி முன்னிலையில் சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டு, நீதவான் விசாரணைகளின் பின்னர் மரண பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த 3 சடலங்கள் மீதான சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள், இன்று திங்கட்கிழமை இடம்பெறும்.

இந்த முக்கொலை தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நதிக கருணாரத்னவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் அதிகாரி ஏ.டி சிசிரவின் வழிநடத்தலில் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஷிக சம்பத் உள்ளிட்ட குழுவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. -