மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி சத்தியாக்கிரகம்

(Ch.சுஜா , ஏஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது நிருவாக மண்டபத்தில் (Senate) வியாழக்கிழமை (ஓகஸ்ட் 25, 2016)  வந்தமர்ந்து கொண்ட மாணவர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த  28 மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி சத்தி;யாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீடங்களைச் சேர்ந்த 28 மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்; வகுப்புத் தடைக்கு உட்பபடுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆயினும், இந்த வகுப்புத் தடை நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியே மாணவர்கள் இந்த சத்தியாக்கரக அமர்வில் குதித்துள்ளனர்.
பல்கலைக் கழக நிர்வாகத்தினருடன் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பல தடவைகள் கலந்துரையாடியுள்ள போதிலும் வகுப்புத் தடையை நீக்க நிருவாகம் முன்வரவில்லையென மாணவர்கள் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி சீரான நிருவாகத்திற்கு இடைஞ்சலாகவும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடக்கும் ஏனைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடைஞ்சலாக இருக்காத நிலைமைக்கு பல்கலைக் கழகத்தை வழிநடாத்த வேண்டும் என்பதால் தாம் குறித்த சில மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக நிருவாகம் தெரிவிக்கின்றது.
ஒழுங்கீனமாக நடந்;துகொண்ட மாணவர்கள் மீதான வகுப்புத் தடை அடுத்த 2 மாத காலத்தில் முடிவடையவுள்ளதாகவும் பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் தொடர்ந்து போராடவிருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த மாணவர் விடுதித் திறப்பு விழாவிற்கு உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தருவதாக இருந்த பொழுது முதலில் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து தீர்வு சொன்னதன் பின்புதான தாங்கள் அமைச்சரை உள்ளே நிகழ்வுக்கு அனுமதிப்போம் என மாணவர்கள் வாயிற் கதவை மூடி கறுப்புக் கொடிகளைக் கட்டி கறுப்புப் பட்டிகளை நெற்றியில் அணிந்தவாறு அமைச்சரைக் காத்திருந்தனர்.
எனினும், குறித்த நிகழ்வுக்கு அமைச்சர் வராமல் மட்டக்களப்பில் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு விட்டு திரும்பிச் சென்று வி;ட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.