வடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை

வடக்கு கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் இன்றும் அச்சுறுத்தல் உள்ளது என இராணுவத் தளபதி லேப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் முழுப்பொய். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் இன்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பயங்கரவாத சூழ்நிலை தொடர்பில்  எமக்கு நல்ல அனுபவம் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததில்  இருந்து நம் வடக்கில் நிலைமைகளை கையாள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம். அதேபோல் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் பலமாக மேற்கொண்டு வருகின்றோம். சர்வதேச நாடுகளின் பார்வை எம்மீது உள்ள நிலையில் இலங்கையில் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறானதாக அமையும் என அனைவரும் பார்த்துகொண்டுள்ளனர். அதேபோல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலைமைகளும் உள்ளது.

இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளது என்பதும் முழுப்பொய்.

வடக்கில் இன்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் உள்ளன. வடக்கு கிழக்கில் மட்டும் அல்ல எந்தப்பகுதியில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. வடக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ள போதிலும் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படுவதாக கூறவில்லை. அதேபோல் வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் தீர்மானமும் இல்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்