பான் கீ மூன் 31இல் இலங்கை வருகை ! காலி , யாழ்ப்பாணம் செல்கிறார்

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது பாரியார் சகிதம் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திப்பார். பின்னர் செப்டம்பர் (1)ஆம் திகதி காலியில் நடக்கவிருக்கும் 'நல்லிணக்கமும் சகவாழ்வும்; இளைஞர்களின் பங்கு' என்ற நிகழ்வில் கலந்து கொள்வார்.


இதையடுத்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஐ.நா. செயலாளர் நாயகம் அங்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திப்பார்.

இவர் தனது விஜயத்தின் போது வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும், சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 2ஆம் திகதி, நிலைக்கும் அமைதி - நீண்ட கால அபிவிருத்தி இலக்குகளை அடைதல்' என்ற தலைப்பில் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் அவர் உரையாற்றுவார்.

பின்னர் ஜீ20 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அன்றைய தினம் பின்னிரவு இங்கிருந்து சீனா புறப்பட்டுச் செல்வார்.