மட்டக்களப்பில் தலைமறைவாகியிருந்த 'நரி' என அழைக்கப்படுபவர் கைது

திராய்மடு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நரி என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அன்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு திராய்மடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இது தொடர்பில் கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகளும் சந்தேக நபர் கைதுசெய்யப்படும் வரையில் ரத்துச்செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரினாலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்துடன் அரசியல்வாதிகளினாலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் குறித்த நபரை கைது செய்வதற்கு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன் மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் உதயகாந்தன் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு சந்தேக நபர் தேடப்பட்டுவந்தார்.

இன்று காலை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை நடாத்தி குறித்த நபரை கைது செய்துள்ளனர்.