ஊரை உருவாக்கிய சிகண்டி முனிவருக்கு சிலைவைத்து வழிபடும் சித்தாண்டி குடிமக்கள்.

(Ch.சுஜா)
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மற்றும் பாரம்பரியங்கள், பழங்குடி மரபுகள், இயற்கை வளங்கள் போன்ற அம்சங்களைக் கொண்ட கிராமமாக காணப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி கிராமத்தையே உருவாக்கிய சிகண்டி முனிவருக்கு  சிலைவைத்து வழிபட்டனர்.

சித்தாண்டி கிராமத்தையே உருவாக்கிய சிகண்டி முனிவர் சிலையினை தனவந்தகர் ஒருவரின் நிதி உதவியின் கீழ் சிலை நிறுவப்பட்டு சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய அரங்காவலர் சபையின் ஒத்துழைப்புடன் இன்றைய தினம் அதிகளவான பொதுமக்கள் மத்தியில் சுபவேளையில் திறந்துவைக்கப்பட்டது.

சித்தாண்டி கிராமமானது ஐந்து கிரமசேவகர் பகுதிகளையுடைய பெரியளவு நிலப்பரப்பைக் கொண்ட கிராமமாகும். இங்கு சுமார் 12000க்கு மேற்ப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டமைந்துள்ளது. இங்கு பல்வேறுபட்ட கலைஞர்கள், கல்வியலாளர்கள் என பலர் காணப்படுகின்றனர்.

சித்தாண்டி எனப் பெயர்வரக் காரணமாக அமைந்தவரே இந்த சிகண்டி முனி. 

'சிகண்டி முனி ஒரு சித்தாண்டி' ஆன வரலாற்றை முன்னோர்கள் வகுத்துவைத்துள்ள பாரம்பரிய வரலாற்று சிறப்பு பெற்றதொரு கிராமமாகும்.

அந்தவகையில் இமயமலைத் தவமுனிவன் சிகண்டி தவத்தின் பயனாக சித்தனாக மாறி, அங்கிருந்து புறப்பட்டு மூவேந்தரின் தழிழகத்தின் ஊடாக ஈழத்தை வந்தடைந்தார். 

காட்டுப் பாதையில் நெடுந் தூரம் நடந்ததால் களைப்புற்ற முனிவர், காடடர்ந்த ஆற்றோர ஆலமர நிழலில் அமர்ந்து இளைப்பாறினார். 

அவ்வேளை மதம் கொண்ட யானை ஒன்று, பெரும் பிறியலோடு முனிவரைத் தாக்க வந்தது. அவர் ஆலிலையொன்றை செபம் செய்து, யானையை நோக்கி ஏவினார்.

அது வேலாக மாறி யானையை வீழ்த்திப பக்கத்து நிலத்தில் குத்தி நின்றது. அந்த இடத்திலேயே சிகண்டி, அந்த வேலைத் தாபித்துக் கொத்துப் பந்தல் இட்டு பூசை செய்து வந்தார்.

இந்த அற்புத செய்தியால் வயல், சேனை வாடிகளில் வாழ்ந்த மக்கள் வேல் தலத்தை சூழக் குடியேறினர். அக் குடியிருப்புக்குக் சித்துக்கள் செய்த ஆண்டியான சிகண்டியின் பெயர் சூட்டப்பட்டு (சித்து 10 ஆண்டி ஸ்ரீ சித்தாண்டி) சித்தாண்டி எனப் பெயர் பெற்றது. அந்த வேல் தலமே இன்றைய சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி கோயிலாக வானூயர்ந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.