கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம்

கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு திரு.திருமதி.வன்னமணி அன்னசுந்தரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் தற்காலம் ஆரையம்பதியில் வசிப்பவருமான வ.குணபாலசிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகப் பாடத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார். இப்பட்டம் கிழக்கிலங்கையில் முக்கிய பதிவாகின்றது. அதாவது கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப்பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்ற சாதனையை இவர் தம் வசப்படுத்தியுள்ளார். இலங்கையில் முருக வழிபாடு – கிழக்கிலங்கை முருக வழிபாட்டு முறைமைகள் பற்றிய சிறப்பாய்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமாகிய மா.வேதநாதன் அவர்களின் வழிகாட்டல், மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்து கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகமம் சார்ந்த ஆகமம் சாராத சக்தி வழிபாடு ஓர் ஒப்பீட்டாய்வு என்னும் தலைப்பில் அதே பல்பலைக்கழகத்தில் முதுதத்துவமாணி(M.Phil)  பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கலாநிதிப்பட்ட ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர்; தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் சி.மௌனகுரு, தகைசார் பேராசிரியர்.ப.கோபாலசிருஷண் ஐயர்  பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியை கலைவாணி இராமநாதன், பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் ஆகியோரின் ஆலோசனைகளையும் பெற்று செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை மாணிப்பட்டம் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்தை ஒரு பாடமாகப் பயின்ற முதல் தொகுதி மாணவர்களில் இவரும் ஓருவர். கிழக்குப் பல்கலைக் கழகத்தின்; இந்து நாகரிக கற்கைகள் பிரிவில் ஒரு வருடம் தற்காலிக போதனாசிரியராகவும், ஐந்து வருடங்கள் வருகை தரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 
தேசிய கல்வி நிறுவகத்தில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கான  இந்து சமய பாடத்திட்ட வரைபுக் குழுவிற்கு இவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. 
அவர் இந்து நாகரிகப் புலம் சார்ந்து பல தலைப்புகளின் கீழ் சர்வதேச ஆய்வு மாநாடுகள், தேசிய ஆய்வு மாநாடுகள் என்பனவற்றில் பங்கேற்று பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.