மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிய பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

(Ch.சுஜா)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டத்திலுள்ள தளவாய் கிராமத்தில் புதிய பாடசகாலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 28, 2016) பிற்பகல் இடம்பெற்றது. தளவாய் சுவாமி அஜராத்மானந்தாஜி வித்தியாலயம் என பெயரிடப்பட்டடுள்ள இப் பாடசாலையை நிருமாணிப்பதற்கு கிழக்கு மாகாண சபை சுமார் 49 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கடந்த கால யுத்தப் பாதிப்புக்கள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த தளவாய் கிராம மக்கள் தற்போது அந்தக் கிராமத்தில் மீள் குடியமர்ந்துள்ள நிலையில் அங்கு தரம் ஒன்றுக்கான 4 வகுப்பறைகளையும் அலுவலகத்தையும் கொண்ட பாடசாலையாக இது நிருமாணிக்கப்படவுள்ளதாக புதிய பாடசாலைக்கான அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தருமலிங்கம் இராசானந்தம் தெரிவித்தார்.
தளவாய் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் தற்போது மீள் குடியமர்ந்துள்ளார்கள்.
இருப்பினும் இந்தக் கிராமத்தில் பாடசாலை ஒன்று இல்லாததன் காரணமாக மாணவர்கள் சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் ஏனைய பங்குடாவெளி, இலுப்படிச்சேனை அல்லது வேப்பவெட்டுவான் ஆகிய ஊர்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது.
பெரும்பாலும் கால்நடையாகவே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. குறிப்பாக முதலாமாண்டு சிறுவர்கள் வீதியைக் கடக்கும்போது காட்டுவழியாகச் செல்லும்போதும் அதிக சிரமத்தை எதிர்கொள்வதுண்டு.
மேலும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும் இந்தப் பகுதியிலுண்டு.
தற்போது இந்தக் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தரம் ஒன்றுக்கான  பாடசாலை சிறார்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பெற்றோரும் ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்தப் பாடசாலை அடுத்த 3 காலப்பகுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று பாடசாலை அதிபர் இராசானந்தம் மேலும் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி பணிப்பாளர் கே. சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். முருகேசப்பிள்ளை, பாடசாலையின் அதிபர் ரீ. இராசானந்தம், மற்றும் ஆலயத் தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,  ஊர்ப்பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.