'துருனு சிரம சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி –பூநொச்சிமுனையை இணைக்கும் சிறிய மதகுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 தேசிய கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 'துருனு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1500 துருனு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் 44 கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3 வேலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.


மேற்படி துருனு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி 167ஏ விபீஸ் இளைஞர் கழகம் ஊடாக றிஸ்வி நகரில் இருந்து காத்தான்குடி –பூநொச்சிமுனையை இணைக்கும் சிறிய மதகுக்கான (சிறிய போக்குக்கு) அடிக்கல் நடும் நிகழ்வு   26-08-2016 வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் பிரதேசத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த சிறிய மதகுக்கான அடிக்கல்லை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உத்தியோகபூர்வமாக நட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கூட்டுறவு முகாமையாளர் கிருபைராஜா,காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கரையோரம் பேணல் அதிகாரி ஜி.மைகல்,சமுர்த்தி உத்தியோகத்தர் பஸீரா,தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி.கிரிஸாந்,விபீஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் ஜெ.ஸாதிர் உட்பட அதன் உறுப்பினர்கள்,பொது மக்கள்,ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மழை காலத்தில் மக்களுக்கு மிகவும் பிரச்சினையாக காணப்படும் இவ் வீதியில் குறித்த சிறிய மதகை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகின்ற நிலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சுமார் எழுபத்தையாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக நிதி  மேற்படி இளைஞர் கழகத்தினதும் மக்களினதும் நிதிப் பங்களிப்போடும் அமையப் பெறவுள்ளது.
'துருனு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அடிக்கல் நட்டி வைக்கப்பட்ட இச் சிறிய மதகுக்கான நிர்மாண வேலைகள் இன்று தொடக்கம் 3 மாத காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.