காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழுடன் இழப்பீடும் வழங்க வேண்டும்! - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

காணாமல்போன சகலருக்கும் மரணச் சான்றிதழ்களும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்ட மூலங்களை இயற்றினால் மட்டும் போதாது அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமெனவும் கூறினார். 

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற காணாமல்போனவர்கள்- இறந்தவர்களுக்கான பதவுச்சான்றிதழ் தொடர்பான தற்காலிக சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,
காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு இவ்வாறான சட்டமூலமொன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமைக்காக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் - காணாமல்போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ – தீர்மாங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. 

அந்தக் குடும்பங்கள் தமது உறவுகள் இன்று வருவார்கள் - நாளை வருவார்கள் என்ற நம்பிக்கையுடனே வாழந்து வருகின்றனர். காணாமல்போன பிள்ளையை நினைத்து தாயும், கணவனை நினைத்து மனைவியும், தந்தையை நினைத்து பிள்ளைகளும் ஏங்கிக் கதறும் நிலையை வடக்கு, கிழக்கில் தினமும் காணமுடியும். எனவே, இது விடயத்தில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

காணாமல்போனோர் பிரச்சினை வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றியுள்ளது. எனவே, அரசு சட்டமூலங்களை இயற்றினால் மட்டும் போதாது. அவற்றில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். 
வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கை வருகின்ற போது காணாமல்போனவர்களது குடும்ப அங்கத்தவர்கள் வீதிகளில் இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். அச்சந்தர்பங்களில் தமது வேதனைகளை கண்ணீர்மல்க அவர்கள்  கூறும் போது நாங்களும் கண்ணீர் விட்டு அழுகின்றோம். எனவே, தமது உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களுக்கு சரியான இழப்பீட்டினை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காணாமல்பேனாவர்கள் ஆணையகம் நிறுவுவதில் மாத்திரம் கவனம் செலுத்தாது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டினை  பெற்றுக் கொடுக்கவும் அனைத்து எம்.பிக்களும் ஒன்றுசேர வேண்டும். காணாமல்போன அத்தனை பேருக்கும் அரசு மரணச்சான்றிதழை வழங்க வேண்டும். இதனை செய்து முடிப்பதற்கு கால எல்லையினையும் குறிப்பிடப்படவேண்டும். 
காணாமல்போனவர்களது குடும்பங்களுக்கு வசதி – வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களது பொருளாதாரம் - அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும்.  – என்றார்.