மட்டக்களப்பு - கொழும்பு ரயிலில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட ஜோடி பொலிசாரிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் புகையிரத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட நெதர்லாந்து நாட்டு இளம் ஜோடியொன்று தொடர்பில் அறியக்கிடைத்துள்ளது.


குறித்த ஜோடி வெலிகந்த பிரதேசத்தில் வைத்து புகையிரதத்தில் ஏறியுள்ளது. மேற்படி ஜோடி இரண்டாம் வகுப்பு அனுமதிச் சீட்டையே கொள்வனவு செய்துள்ளது.


பின்னர் அவர்கள் மோசமாக நடந்துகொள்வதாக அதே வகுப்பில் பயணித்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜோடியை எச்சரித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் முதலாம் வகுப்பு உறங்கும் பிரிவிற்கு சென்று அங்கும் அநாகரிகமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரண்டாம் வகுப்பு அனுமதிச்சீட்டுடன் , முதலாம் வகுப்பினுள் பயணிக்க முடியாதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதனை கவனத்தில் கொள்ளாத அவர்கள் தொடர்ந்தும் அங்கிருந்து அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களின் நடவடிக்கைக்கு மற்றைய பயணிகளினது கடும் எதிர்ப்பினையடுத்து, புகையிரதம் கொழும்பு கோட்டையை வந்தடைந்த தும், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.