முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி சர்ச்சை: கிழக்கு மாகாணத்திலும் மருத்துவ சோதனை

இலங்கையில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவை என்ற கோரிக்கை கிழக்கு மாகாண சபையிலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக வியாழக்கிழமை அவைத் தலைவர் சந்திரதாஸ் கலப்பதி தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான கோ. கருணாகரம் இது தொடர்பான பிரேரனையொன்றை முன்வைத்திருந்தார்


''கடந்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணிக்கு பொறுப்பாகவிருந்த தமிழினி உட்பட 100-க்கும் அதிகமான முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மர்மமான முறையில் இறந்து கொண்டிருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

சுமார் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வு பெற்றிருக்கின்றார்கள். இவர்களுக்கு காணப்படும் சுகவீனத்தை மருத்துவ பரிசோதனை மூலம் உண்மை நிலை கண்டறியப்பட்டு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என அவரது அந்த பிரேரனையில் கூறப்பட்டிருந்தது.

தனது பிரேனையை முன் வைத்து உரையாற்றிய அவர், ''புனர்வாழ்வு முகாம்களில் இவர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும் தற்போது பேசப்படுகின்றது . அது மட்டுமல்ல அரசியலாகவும் இது மாறிவருகின்றது.

வட மாகாண சபை தற்போது இது தொடர்பாக கவனம் செலுத்தி புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப் புலிகளை சிறப்பு மருத்துவ குழுவொன்றின் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த முடியாவிட்டாலும் ஒரு பகுதியினரையாவது அடையாளம் கண்டு அவர்களை பரிசோதனை செய்து உடலில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய மாகாண சுகாதார அமைச்சு சிறப்பு மருத்துவர் குழுவொன்றை நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்

இதற்கு பதிலளித்த மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். எம். நஸீர், "மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டு மாகாணத்திலுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றினால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்றார் .

இலங்கையில் உள்நாட்டு இறுதி கட்டப் போரின் போது கைதான அல்லது சரண் அடைந்த முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் 11 ஆயிரம் பேர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு தற்போது சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலிகளில் ஒரு சிலர் அண்மைக் காலங்களில் மரணமடைந்துள்ள நிலையில் இவர்களின் மரணம் தொடர்பான சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

வட மாகாண சபையிலும் இது தொடர்பான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு சர்வதேச மருத்துவ உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என்ற பிரேரனையொன்று முன் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் அமர்வுகளில் கருத்துக்களை முன்வைத்த முன்னாள் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஏதோ ஊசி ஏற்றப்பட்டதாகவும் இரசாயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து அது தொடர்பான சந்தேகங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் சந்தேகங்களையும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சும் இராணுவ தலைமையகமும் தொடர்ந்து மறுத்து வருகின்றன.