மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்களுக்கான தனியார் பஸ் சேவையொன்று நேற்று  (21.8.2016) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் எடுத்துக் கொண்ட முயற்சியினால் கிழக்கு மாகாண வீதிப் பயணி போக்குவரத்து அதிகார சபையினால் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதியிலிருந்து காத்தான்குடி மற்றும் நாவற்குடா கல்லடி ஆகிய நகரங்களின்  ஊடாக மட்டக்களப்பு வரை இந்த பெண்களுக்கான தனியார் பஸ் சேவை இடம் பெறவுள்ளது.


ஆரையம்பதியிலுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால் இன்று

(21.8.2016)ஞாயிற்றுக்கிழமை இந்த தனியார் பஸ் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண வீதிப் பயணி போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து அதிகாரி ஏ.எம்.அன்வர் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி மற்றும் கத்தான்குடி போன்ற பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவிகளின் போக்குவரத்தை இலகு படுத்துவதற்காக இந்த தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

ஆரையம்பதி மற்றும் கத்தான்குடி போன்ற பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர் அவர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையிலும் அவர்களின் கல்விக்கு உதவும் வகையிலும் இந்த தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் மாணவிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்களுக்கான இந்த தனியார் பஸ் சேவை பாடசாலை நாட்களில் பிற்பகல்  2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று மாலை ஆறுமணிக்கு மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கி வரும் அத்தோடு பாடசாலை விடுமுறை நாட்களில் காலை 6.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்புக்கு சென்று பின்னர் பிற்பகல்  1 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதிக்கு வரும் பின்னர் 2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும்.

இதற்கான ஒரு வழிக்கட்டணமாக 20 ரூபா அறவிடப்படுமென கிழக்கு மாகாண வீதிப் பயணி போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து அதிகாரி ஏ.எம்.அன்வர் தெரிவித்தார்.