கைதாகும் எவரையும் தண்டிக்க முடியாது ! பொலிஸாருக்கு பொலிஸ் ஆணைக்குழு அறிவுறுத்தல்

பொலிஸாரால் கைதுசெய்யப்படும் எந்தவொரு நபரையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தைக்கூறியோ அல்லது போர்க்காலச் சூழலில் கைது இடம்பெற்றது என்று தெரிவித்தோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ தண்டிக்க முடியாது என்று பொலிஸ் சேவை ஆணைக் குழு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வ​ழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒழுக்கக்ேகாவை ஒன்றை பொலிஸ் ஆணைக்குழு பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.


பொலிஸ் அதிகாரிகளினால் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்கக் கோவையில் இது தொடர்பில் விஷேடமாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு ஸ்தீரமற்ற அரசியல் நிலையில் அல்லது அவசர சூழ்நிலை போன்ற விஷேட காரணங்களினால் அவ்வாறான தண்டனை வழங்க முடியாது என இதனூடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களைக் கைதுசெய்து தண்டனை வழங்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என கூறுகின்ற ஆணைக்குழு பொலிஸாருக்கு எந்தவித நீதிமன்ற அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடுகின்றது.

அவ்வாறு கைதுசெய்யப்படுன்றவர்களின் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக தொடர்ந்தும் கவனமாக இருக்குமாறும், தேவையான எல்லா சந்தரப்பங்களிலும் வைத்திய உதவியினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தக் கோவை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல பொலிஸ் அதிகாரிகள் தேவையான சந்தர்ப்பத்தில் மாத்திரமே தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும், அது தமது கடமைகளை நிறைவேற்றக்கூடிய மட்டத்திலேயே இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும் பொலிஸ் அதிகாரியின் பெயர் அல்லது உத்தியோகபூர்வ இலக்கத்தை வேண்டி நின்றால் அதனை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அக்கோவை குறிப்பிடுகின்றது.