கடத்தப்பட்டு காணமல் போனவர்கள் தொடர்பாக மூவர் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று பேர் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் நடைபெற்ற ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக, இந்த கைது நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமாரின் முன்னாள் வாகன ஓட்டுநரான அழகரெத்னம் யுவராஜ் இவர்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏனைய, இருவரும் கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இனியபாரதியின் ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பிரதேசத்தில் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளன
கடந்த அரசின் பதவிக் காலத்தில் அம்பாறை மாவட்டத்திலும் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
ஆட்கள் காணாமல் போன சம்பங்கள் தொடர்பாக இனியபாரதி மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் காணாமல் போனவர்களின் உறவுகள் சிலரால் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு , காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் குழு உள்பட பல்வேறு அமர்வுகளின் போது வழங்கிய சாட்சியங்களிலும், இதனை தெரிவித்திருந்தனர்

அம்பாறை மாவட்டத்தில், ஆட்கள் கடத்தல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை இனியபாரதி தொடர்ந்து மறுத்து வருகிறார்.