கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் “சக்கரநாற்காலி” வழங்கிவைப்பு

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திசபையினால் மண்டூர் கோட்டமுனையில் வலது குறைந்த மாணவர்களுக்கு சக்கரநாற்காலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கிவைக்கப்பட்டன.


கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் மண்டூர் கோட்டமுனை பாலர் பாடசாலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தேசிய மனிதவளஅபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், ஆலய பிரதமகுரு, சமூர்த்தி உத்தியோகத்தர், இந்துசமய மறுமலர்ச்சி மன்றத் தலைவர் த.சவுந்தரராசா மற்றும் மன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மண்டூர் கோட்டமுனை இந்துசமய மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கைக்கு அமைய இரு வலதுகுறைந்த மாணவச் செல்வங்களினது தேவையினை கருத்தில் கொண்டு இந்த “சக்கரநாற்காலி” வழங்கப்படுகின்றன. இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பம் கல்வியில் சாதிப்பதே ஆகும். மாற்றுதிறனாளிகளாக காணப்படுவதனால் கல்விகற்பதில் பல்வேறு பிரச்சினைகளினை எதிர்நோக்குகின்றனர். அந்தவகையில் இவர்களது எதிர்காலத்திற்கு பக்கபலமாக இருக்க இந்த “சக்கரநாற்காலி” தேவையாக இருந்தது என கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திசபையின் தலைவர் த.துஸ்யந்தன் தனது தலைமையுரையின் போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து மக்கள் மத்தியில் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு,அவர்களுக்குத் தேவையான வசதிவாய்ப்புக்களை, அவ்வப்போது இச்சபை நிவர்த்தி செய்துவருகின்றது. இச்சபையுடன் இணைந்து தன்னாலான உதவிகளை இக்குழந்தைகளுக்கும் மக்களுக்கும் செய்யகாத்திருப்பதாகவும், இதன் போது கலந்து கொண்ட கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தேசிய மனிதவள அபிவிருத்திச்சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் தெரிவித்தார்.

அதிதிகளின் உரையினை தொடர்ந்து இந்துசமய மறுமலர்ச்சி மன்றத் தலைவர்; த.சவுந்தரராசா அவர்களின் நன்றியுரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.