மட்டக்களப்பு - புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியது.


(வரதன்) மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்தக்காரணமாக தடைப்பட்டிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்தான புகையிரத சேவைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் வழமைக்குத்திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த புகையிரதத்தின் பின்னால் மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியதில் புகையிரதப் பெட்டி  எஞ்சின் ஒன்றும்  புகையிரதப் பாதையும் சேதமடைந்தது
.
இதனால் நேற்று காலை 10.15 மணிக்கு மாகோவுக்குச் செல்லும் புகையிரதம் இடை நிறுத்தப்பட்டதுடன், நேற்றையதினம் மாலை 5.30 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் கொழும்புக்குச் செல்லும் புகையிரதங்கள் ஏறாவூர் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்குச் சென்றது.

இருப்பினும் இன்றைய தினம் முதல் சகல சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக புகையிரத நிலை அதிபர் தெரிவித்தார்.
நேற்றுக் காலை 5 மணி 05 நிமிடமளவில் நடைபெற்ற விபத்து காரணமாக தடம்புரண்ட  புகையிரதம், மற்றும் சேதமடைந்த புகையிரதப் பாதையின் திருத்த வேலைகள் மாகோவில் இருந்து வருகை தந்த இயந்திரங்களுடனான திருத்தல் செயலணி மற்றும் திருகோணமலை, அனுராதபுரம், பொலநறுவை புகையிரத ஊழியர்களும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை  முதல் மேற்கொள்ளப்பட்ட துரித திருத்த வேலைகளினால் இன்றைய தினம் காலை 6.15க்கு கொழும்புக்குப் புறப்படும் உதயதேவி புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததுடன், 10 மணியளவில் முழுமையான திருத்த வேலைகள் நிறைவு பெற்றன.

நேற்றைய தினம் இடம் பெற்ற புகையிரத விபத்துக்கு எஞ்சின் சாரதியின் கவனக்குறைவே காரணம் என முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.