ஏறாவூர் இரட்டை கொலை; சந்தேகநபர்கள் 06 பேரும் அக்டோபர் 5 ம் திகதி வரை விளக்கமறியல்

(நாஸர்) ஏறாவூர் இரட்டைகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆறு பேரும் எதிர்வரும் அக்டோபர் 5 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் 23.09.2016 அன்று ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.ரிஸ்வி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


மேலும் பொலிஸார் சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து விஞ்ஞான ரீதியிலான உறுதிப்பாட்டிற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களக்கத்திட்கு அனுப்புமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


24 வயதுடைய முஹமது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹமது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹமது றாசிம், 23 வயதுடைய புஹாரி முகமது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முஹமது பிலால் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளோர் ஆவர்.

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனிரா பானு மாஹிர் ஆகியோர் கடந்த 11.09.2016 ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை பொல்லால் அடித்து கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட வேளை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.