யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மர்ம மரணம் ; ஐந்து போலிசார் கைது


இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிசார் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. இச்சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பொலிசார் ( சி.ஐ.டி) விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் அரசின் தகவல் திணைக்கள அறிக்கையொன்று கூறுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அரசறிவியல் பீட மாணவன் நடராஜா கஜன் (23), ஊடகக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த மாணவன் பவுண்ராஜ் சுலக்ஷன் (24) ஆகிய இருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
விபத்து காரணமாகவே மரணம் ஏற்பட்டதாகக் காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆனால் பின்னர் அரசின் தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில்,இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக அந்த அறிக்கை கூறியது.

போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணம் ?
ஆயினும் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக களமிறக்கப்பட்டுள்ள விசேட காவல்துறையின் அணியொன்று இந்த விபத்து நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற இடத்தில் கடமையில் இருந்ததாகவும், விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நேரம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி செய்த சைகையை மீறிச் சென்றதனால், காவல் துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால் தடம் மாறிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி சகிதம் சென்ற யாழ் மாவட்ட நீதவான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் உயர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பதட்டத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ததேகூ அறிக்கை
இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் பற்றி இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து தனது கவலையை தெரிவித்தாகவும், இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார் என்று கூறியது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றும் கூட்டமைப்பின் அறிக்கை கூறியது.
இது குறித்து பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கோரியது.