சமாதானம் சகவாழ்விற்காக யப்பானிய பௌத்த துறவிகளும் இந்தியாவின் காந்தி அமைப்பினரும் இணைந்து பாத யாத்திரை

(செ.துஜியந்தன்)
சமாதானத்தையும் சகவாழ்வின் தேவையையும் இலங்கை மக்களுக்கு உணர்த்துவதற்கான யப்பானிய பௌத்த துறவிகளும் இந்தியாவின் காந்தி அமைப்பினரும் இணைந்து அக்டோபர் மாதம் 14ம் திகதி ஆரம்பித்த சர்வமத சமாதான பாதயாத்திரை (22ஆம் திகதி ) மட்டக்களப்​பை வந்தடைந்தது
 
1986ல் சமாதான பாதயாத்திரை வந்த யப்பானிய பெளத்த பிக்கு யொக்கோடசுகா யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் சமாதான நடவடிக்கையை  முன்கொண்டு செல்வதற்காகவும் சமாதானம், சகவாழ்வு மற்றும் உலக சமாதானத்தை வலியுறுத்தியும் இச் சமாதான பாதயாத்திரை இங்கு நடைபெற்று வருகின்றது. 

கடந்த அக்டோபர் 14ல் இந்தியாவின் மதுரை சங்கரன் கோவில் அமைதி கோபுரம் அருகில்  சர்வமத அமைதிப்பிராத்தனையுடன்  இப்பாதயாத்திரை   ஆரம்பமாகியது. 

இலங்கையில் கண்டி,சிவனொளிபாதமலை, கதிர்காமம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இச் சமாதான பாதயாத்திரை செல்கின்றது.  

இவ் யாத்திரை குழுவினரால், “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - பகவத்கீதை, ''எல்லாப்புகழும் இறைவனுக்கே - குர்ஆன், ''உன்னைப் போல் உன் அயலானையும் நேசி - பைப்பிள், ''மானிடர் அகிம்சையை நோக்கி முன்னேற்ற வில்லையெனில் பேரழிவை நோக்கி விரைந்து ஓடுவர் - மகாத்மா காந்தி போன்ற அற்புத வாக்கியங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை இவர்கள் மக்களுக்கு விநியோகித்தவண்ணம் சென்றனர்.