கிழக்கு மாகாண தமிழ்பேசும் பாடசாலைகளில் தமிழ்மொழி வாழ்த்து பாடப்படவேண்டும். - ச.வியாழேந்திரன்

(படுவான்  பாலகன்) கிழக்கு மாகாணப்பாடசாலைகளிலே உள்ள தமிழ்மொழிபேசும் பாடசாலைகளில் தமிழ்மொழி வாழ்த்துக்கள் ஒவ்வொரு பாடசாலை நடைபெறும் தினங்களிலும் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் அல்லது முடிவுறும் நேரத்தில் பாடப்பட வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சும், பணிப்பாளரும் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஏ.எல்.எம். நிஸாம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இரண்டாம் நாள் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

தமிழ்மொழி வாழ்த்து பாடசாலைகளில் தினந்தோறும் பாடுவது மருவி நிகழ்வுகளில் மட்டும் பாடுகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. இது தவிர்க்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பாடசாலைகளில் பாடப்படவேண்டும். அதேபோன்று எமது சகோதர இனமான முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு தமது கலாசார உடையுடன் செல்கின்ற போது தமிழ் மாணவர்கள் வெள்ளிக்கிழமைகளிலாவது தமது கலாசார உடைகளுடன் பாடசாலைக்கு செல்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும்.

நாட்டிலே பிரச்சினைகள், இனமுறுகல் இடம்பெறுவதற்கு காரணம் மதவாதிகளும், இனவாதிகளுமே ஆகும். இவ்விருவாதிகளும் இல்லாமல் இருக்குமாக இருந்தால் நா டு நல்லிணக்கம், சகோதரத்துவம் கொண்டநாடாக வளரும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.