நாடா புயல் ! கடலோர மக்களுக்கு எச்சரிக்கை ! 3 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கரையை தாக்கக்கூடும்

நாட்டின் கிழக்கு பகுதியில் தென் மேற்கு வங்காள விரிகுடா கடற் பிரதேசத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதைய நிலையில் புயலாக மாற்றமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது 'நாடா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.



தற்போதைய நிலையில் அது முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் வடமேற்கு பிரதேசத்தின் ஊடாக யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு அருகில் பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளை நள்ளிரவு குறித்த புயல் தமிழகம் நோக்கி நகரவுள்ளதாக  வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 2ம் திகதி வரை வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியிலும் விட்டு விட்டு கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாடா புயலின் தாக்கம் காரணமாக மன்னாரில் இருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கடற்கரைக்கு அருகில் சுமார் 3 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கரையை தாக்கக்கூடும் என்பதால் கடலோர மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.