அரசின் இறைமை, மக்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது.

(படுவான் பாலகன்) மக்களாட்சி நாடுகளில் இறைமையானது மக்களிடமேயுள்ளது. மக்கள் தமது இறைமையினை, வாக்குரிமை மூலமாகப் பயன்படுத்தி அரசாங்கத்தினைத் தெரிவு செய்கின்றனர். இவ்வாறு தெரிவு செய்யப்படும் அரசாங்கமானது மக்களின் உரிமையினைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், மக்கள் மூலமாக இறைமையினைப் பெறுகின்ற அரசாங்கமானது அதனைப் பெற்றதும் மக்களை மறந்து விடுகின்றது. கடந்த காலத்தில் இப்படியான நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்றுள்ளன. உண்மையான ஜனநாயக நாடுகளில் இறைமை என்னும் அதிகாரம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைய வேண்டும். என நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று(07) நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் அடிப்படைவாதம் நிலவும் நாடுகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்துனரின் அல்லது சமூகத்தினரின் ஆட்சியாகப் பிற்போக்குவாதிகள் கருதுகின்றனர். இதனால் சிறுபான்மை சமூகத்தவரை அடக்குவதிலும், முடக்குவதிலும், அழிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நாட்டில் போராட்டங்கள் வன்முறைகள் வெடிக்கின்றன. நியாயமான மக்களின் போராட்டங்கள் பயங்கரவாதங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படியான நிகழ்வுகள் இலங்கையிலும் நடந்தேறியுள்ளது.


இலங்கையில் முப்பதாண்டுகள் யுத்தம் நடைபெற்றதற்கான காரணங்களை உருவாக்கி விட்டு, யுத்தம் உருவானதும் போராளிகளைப் பயங்கரவாதிகளாக அரசு காட்டியது. சர்வதேச உதவிகளையும் பெற்றது. போராட்டத்தினை மௌனிக்கவும் செய்தது.

தமிழ் மக்கள் நியாயமான உரிமைகளைக் கொடுப்பதற்கான பேச்சு வார்த்தைகள் ஒப்பந்தங்கள் யுhவும் ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளாகவே அமைந்தன. 1980 களில் வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் கூட தனிநாடாகச் சித்தரித்துக்காட்ட முற்பட்ட அடிப்படைவாதிகள் இலங்கையிற் காணப்பட்டனர். இப்படியான போக்கினால் தான் நாடு யுத்தகளமாகவும், இரத்த களமாகவும் மாறியது.  

இப்படியான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளாத அடிப்படை வாதிகள் தற்போதும் தாராளமாக உள்ளனர். தேர்தல்களில் மக்கள் இவர்களது மூக்குகளை உடைத்தாலும் மூர்க்கத்தனம் குறையாமல் இவர்கள் முட்டாளத்தனமான வழிகளிற்றான் செல்லுகின்றனர்.

முப்பதாண்டுகள் தொடர்ந்த யுத்தம் முடிந்தாலும் மக்களின் அல்லோலகல்லோலம் இன்னும் குறையவில்லை. அகதிகளாய், அங்கம் இழந்தவர்களாய், விதவைகளாய், காணாமல் ஆக்கப்பட்டவர்களாய், அநாதைகளாய், உளவியல் நோயாளர்களாய், வதைக்கப்பட்டவர்களாய், வஞ்சிக்கப்பட்டவர்களாய் எமது மக்கள் இன்னும் வாழ்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க  வேண்டியதும் அரசின் பொறுப்பாகும்.

இன்னும் எமது மக்கள் தமது சொந்த வீடு வாசல்களைப் படையினரிடம் பறி கொடுத்து விட்டு, உறவுகளைப் பலி கொடுத்து விட்டு மாறாத மனறணங்களோடு நடைப்பிணங்களாக வாழ்கின்றனர். மட்டக்களப்பிலுள்ள சித்தாண்டியை அண்டிய மொறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் இன்னும் 52 குடும்பத்தினர் தமது வீடுகளையும் வாழ்விடங்களையும் பாடசாலையினையும் கால் நூற்றானண்டு காலம் இழந்து பரிதவிக்கின்றனர். மேலும் மண்டூர் பாலமுனையில் 32 குடும்பத்தினர் தமது வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் வாழுகின்றனர்.

இதே போன்றுதான் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வீடுகள் இருந்தும் அகதிகளாய், காணிகள் இருந்தும் காணியிலிகளாய், எமது மக்கள் தவிக்கின்றனர். நல்லாட்சியில் காணிகள், நிலங்கள், சில விடுவிக்கப்பட்டாலும், மேலும் விடுவிக்கப்பட வேண்டியப ட்டியல் நீளமாகவேயுள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கம் நல்லதாக மக்களுக்குத் தெரிய வேண்டுமாயின் மக்களின் ஏக்கங்கள், பெருமூச்சுகளுக்கு விடை கிடைக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் நியாயமானதாகவும், கனதியாகவும், அமைய வேண்டும். அதன் மூலமாக எமது மக்கள் சொந்தமான மண்ணல் இடையூறுகள் இல்லாமல் தமது தலை விதிகளைத் தாமே நிருணயம் செய்ய வழிகோல வேண்டும். இனியும் தங்கி வாழ்வதும், தொங்கி வாழ்வதும் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்க்க கூடாது. 

வாழுங்கள் - வாழவிடுங்கள், ஆளுங்கள் எம்மையும் ஆளவிடுங்கள். 21 ஆம் நூற்றாண்டிலாவது எமது நாடு அபிவருத்தியடைய வழிவிடுங்கள், எமது புத்தி ஜீவிகளையும், அவர்களது வளங்களையும் நாட்டின் மீள் எழுச்சிக்காகப் பயன்படுத்த வகை செய்வோம். ஒரு சமூகத்தினரின் உரிமைகளை மறுக்கின்றவர்கள் கூட தமது உரிமைகளை அனுபவிக்க முடியாது என்பதைக் கடந்த கால வரலாறு காட்டியுள்ளது என்றார்.