ஏர்முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சிரமதான நிகழ்வும்,வாழ்வாதார கடன் உதவிவழங்கலும்

(ஜெ.ஜெய்ஷிகன்)
டிசம்பர் 3 சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. பிறப்பு, நோய்,யுத்தம் மற்றும் விபத்தின் மூலம் பலர் விசேட தேவைக்குள்ளோராகின்றனர். அவர்களின் திறமைகள், ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்து மற்றவர்களைப் போல் அவர்களை சாதாரணமானவர்கள் போல் உலகில் வாழ்வதற்கு ஏற்றாற்;போல சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

2016ம் ஆண்டு சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்படுத்தப்பட்ட 17 குறிக்கோள்களை அடைவதற்கு உலகில் இருக்கும் அனைத்து விசேட தேவையுடையோரின் பங்களிப்பும், அவர்களையும் இக்குறிகோள்களுடன் இணைத்து செயற்படவும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக ஏறாவூர்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஏர்முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இக் குறிக்கோள்களுக்கு பங்களிக்கும் வகையில் ஆரோக்கியமான சமூகத்திற்கு தூய்மையான சுற்றாடலை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் 03.12.2016 இன்று சிரமதானப் பணிகளை மேற்கொண்டது. அச்சங்கத்தின் அங்கத்தவர்கள் இணைந்து வைத்தியசாலையின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக்கினார்கள். விசேட தேவையுடைய இவர்கள் தங்களது விசேட தேவையினை ஒருபின்னடைவாக நினைக்காது, சகலரும் வந்து செல்லக்கூடிய வைத்தியசாலை வளாகத்தைசுத்தம் செய்து கொடுத்து தங்களாலும் இச்சமூகத்திற்கு முன்மாதிரியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். 

மேலும் இந்நிகழ்வில் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் தாம் சங்கத்தில் சேமித்த பணத்தை மூவருக்கு வாழ்வாதார சிறுகடனாகவும் வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேசசபை மற்றும் சமூகசேவை உத்தியோத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்துகொண்டனர்.