இனவாத செயலில் ஈடுபடும் சிறு குழுவுக்கு எதிராக சிங்கள மக்கள் கதைப்பவர்களாக மாறவேண்டும்


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

சிங்கள சமூகத்தில் இனவாத செயலில் ஈடுபடும் சிறு குழுவுக்கு எதிராக சிங்கள மக்கள் கதைப்பவர்களாக மாறவேண்டும் அப்போதூன் உண்மையான சமூக நல்லினக்கம் ஏற்படும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

சிரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் பேதே பிரதேச செயலாளர் முசம்மில் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு மற்றும் அரசியல் நடவடிக்கை தொடர்பாக அறிந்து கொள்ளும் பொருட்டு கொழும்பு சிரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பின்னவல சங்க சுமன தேரர் தலைமையிலான குழுவொன்று (4.12.2016) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.

கிராம அபிவிருத்தி திணைக்கத்தில் ஏற்பாட்டில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இவர்கள் இதன் போது; காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சென்று அங்குள்ள மக்களின் நிலைமை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து கொண்டனர்.


இதன் போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் தொடர்ந்து கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அணைவரையும் இலங்கையர் ஒன்றுக்கு கீழ் இலங்கை மக்களை ஒற்றுமைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இந்த வேறு பாடுதான் கடந்த முப்பது வருட கால யுத்தத்திற்கு வழிகோழியது.

நாம் இன்னும் அபிவிருத்தியடையாததற்கு பிரதான காரணமாக இருந்தது யுத்தமேயாகும். முப்பது வருடங்கள் நமது நாட்டில் இடம் பெற்ற கொடூரமான இன முரண்பாட்டினால் நாம் பலவற்றை இழந்து நாடும் நாட்டு மக்களும் மிகவும் ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நமது நாட்மை அபிவிருத்தி செய்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் எமக்கு  கிடைத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கான ஆற்றல் நமது மக்களிடத்தில் இருக்கின்றது. அதற்கான வாய்பப்பிருக்கின்றது. ஆனால் அதற்கான சில தடைகள் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது.

அந்த தடைகளை நாம் எப்படி வெற்றி கொள்கின்றமோ அதில் நமக்;கு வெற்றி இருக்கின்றது.

அதில் முதலாவது விடயம் சமூக நல்லிணக்கமாகும். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடகளை குறைத்து பொதுவான விடயங்களில் உடன் பாட்டை கொண்டு வந்து நிரந்தரமான சமாதானத்தை தோற்றுவிப்பதன் மூலம்தான் இந்த அபிவிருத்திக்குரிய சூழலை நாம் ஏற்படுத்த முடியும்.

மீண்டும் இன முரண்பாடுகள் அதிகரிக்குமென்றால் சமாதானம் சந்தேகமாக போய் விடும். சமாதானம் இல்லையென்றால் அபிவிருத்தியில்லை.

ஊழலை இல்லாமல் செய்து வெளிப்படைத்தன்மையை நாம் கொண்டு வரவேண்டும்.

சமூக நல்லிணக்கமும் நிலையான அபிவிருத்தியையும் நமது நாட்டில் ஏற்படுத்தவே ஜனாதிபதியும் பிரதமரும் உழைத்து வருகின்றனர்.

இதை மேற் கொண்டு வரும் நிலையில் தற்போது ஒரு பூதம் கிளம்பியுள்ளது. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு முரண்பாட்டை தோற்றுவிப்பதற்காக சிலர் கடுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த நடவடிக்கை சிங்கள சமூகத்தில் இருந்து ஏற்பட்டுள்ளது. இதை யார் தடுப்பது யார் இதை தடுப்பதற்கு வகிபாகங்களை வகிப்பது என நாம் பார்த்தால் முக்கியமாக சிங்கள மக்கள் இந்த சிறிய இனவாத சிறு குழுவுக்கு எதிராக கதைப்பவர்களாக மாறவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யாத வரைக்கும் இந்தப்பிரச்சினையை தீர்க்கமுடியாது.

அந்த வகையில் இந்த ஜெயவர்த்தன புர  பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களுக்கு தலைமை தாங்கி ஒரு தேரர் வந்திருக்கின்றார். அவரை நான் மாதுலுவாவே சோபித தேரரை பார்ப்பது போன்றே பார்க்கின்றேன்.

எனவே புத்திசாலிகளை உருவாக்கும் சிரீ ஜெயவர்த்தன புர பலக்லைக்கழகம் இந்த செய்தியை அங்கு கொண்டு போய்  இந்த நாட்டை இன்னுமொரு கலவரத்திற்கு கொண்டு போக கூடாது என்பதை கூறி அங்கு ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும்.

முப்பது வருடங்களாக இழந்த அந்த இழப்புக்களை திரும்ப பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கும் போது அதை இழந்து விடக் கூடாது.

சிங்கள சமூகத்திலிருந்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக சிறிய குழுக்களிடமிருந்து வரும் சவால்களை சிங்கள சமூகத்தின் உங்களை போன்ற புத்தி சாலிகள் தேரர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்து அவர்களுக்கு இவ்வாறான நாட்டின் அபிவிருத்தி சமூக நல்லிணக்கம் என்பவற்றை எடுத்துக் கூறவேண்டும்.

இவ்வாறு சிங்கள சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் செய்யும் போது அதுதான் மற்றய சமூகத்திற்காக பாதுகாப்பாகும்.

அவ்வாறில்லாமல் சிங்கள சமூகத்திற்கெதிராக இனவாதத்தினை தூண்டினால் மீண்டும் ஒரு பிரச்சிணைக்கு இட்டு செல்லும் அதனால் இந்த நாட்டின் அபிவிருத்தி வரப்போகும் சந்ததிக்கும் இல்லாமல் போய் விடும் நாடு அழிந்து போகும்.

இது மிகவும் பொறுப்பு வாய்ந்த வேலைத்திட்டமாகும். இந்த வேலைத்திட்டத்தினை மேற் கொள்வதற்கு காத்தான்குடி பிரதேச செயலகம் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பு பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்பன உங்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

இதை சிங்கள சமூகத்திற்குள் கொண்டு சென்று சிறிய இன வாத குழுவொன்றின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வேலை செய்து நாட்டை சமூக நல்லிணக்கத்தின் பால் நாட்டில் நிலையான அபிவிருத்தியின் பால் கொண்டு செல்ல வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

இதில் கருத்து தெரிவித்த கலாநிதி பின்னவல சங்க சுமன தேரர் சிங்கள மக்களுக்கும் தமிழ் முஸ்லிம் மக்களுக்குமிடையிலனா நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

சமூகங்களிடையே புரிந்துனர்வும் நல்லுறவும் கட்டியெழுப்பப்டல் வேண்டும். இதனை பல்கலைக்கழக மாணவர்களும் உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன் போது காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாச சபையின் செயலாளர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் கிராம அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.