பஸ் சேவை பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முன்னெடுத்து வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை அச்சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையிலேயே இப்போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 3 நாட்களுக்கு மேல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் மக்களுக்கு சிரமத்தை ஏறுபடுத்தும் வகையில் செயற்படும் பஸ் உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இதேவேளை, தாம் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவருடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில், இ.போ.ச. விற்கு வலு சேர்க்கும் வகையில் 40 - 46 ஆசனங்களைக் கொண்ட 1,000  பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதோடு, அதன் மூலம் பொது போக்குவரத்தை பலம் மிக்கதாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.