தமிழ்மக்களது காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சிக்கு எந்த தமிழ்மகனும் துணைபோகமுடியாது!

(காரைதீவு நிருபர் சகா)

எம்.பியின் கருத்து ஒட்டுமொத்த தமிழ்மக்களின் கருத்து என்கிறார் ஜெயசிறில்!

தமிழ்மக்களின் பெறுமதியான காணிகளை திட்டமிட்டு அபகரிக்கவே கல்முனை புதியநகரஅபிவிருத்தித்திட்டம் உருவானது. தமிழ்மக்களின் எந்த சம்மதமும் பெறாமல் ரகசியமாக மேற்கொள்ளும் இத்திட்டத்தை எந்தவொரு தமிழ்மகனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். கோடீஸ்வரன் எம்பியின் கருத்தென்பது ஒட்டுமொத்த அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் கருத்தாகும்
.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் முன்னாள் கிழக்குமாகாணசபை வேட்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆக்ரோசத்துடன் கூறினார்.
கோடீஸ்வரன் எம்.பி. கல்முனை நகரஅபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாகஇருக்கிறார் என பிரதியமைச்சர் ஹரீஸ் விடுத்த அறிக்கைக்கு பதிலளித்தே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
கல்முனையில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் பெரும்இ னமொன்றின் சம்மதம் பெறப்படாமல் அவர்களது காணிகளை சுவீகரிக்க யாராவது அனுமதிப்பார்களா?



அந்த திட்டம் உண்மையில் அனைவருக்கும் பயனுள்ளது என்றால் ஏன் தமிழ்த்தலைமைகள் எம்.பி. மாகாணசபைஉறுப்பினர்கள் மற்றும் தமிழர்பிரதிநிதிகளிடம் அதனை முன்னரே தெரிவிக்காமல் தவிர்த்தது?
மிகரகசியமாக ஒரு இனம் மட்டும் கூடிக்கதைத்து இருஇனம் வாழ்கின்ற இடத்தில் அபிவிருத்தி செய்வது முறையா? இதுதான் நாகரீகமா?

உண்மையில் இது தமிழ்மக்களின் உரிமைகளை மீறும்செயல். இச்சூழ்ச்சியினூடாக காரைதீவு கல்முனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை போன்ற தமிழர்பிரதேசங்களை கபளீகரம் செய்யும் சதி எனலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்கினால் இது தமிழ்மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு.இதற்கு எந்த தமிழனும் இணங்கமாட்டான்.
ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இனங்கள் மத்தியில் திட்மிட்டு இனவன்மத்தை வளாத்து அரசியல் செய்யமுனைவதை பிரதியமைச்சர் இத்தோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.

பிரதியமைச்சர் பதவி என்பது தனியே முஸ்லிம் இனத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்ட பதவி அல்ல. சகல இனங்களிற்கும் பொதுவான பதவி. எனவே தங்களுடைய வேலைத்திட்டத்தில் தமிழ்ப்பிரதேசங்களும் உள்வாங்கப்படவேண்டும். அதனூடாக தமிழ்மக்களின் மனங்கள் வெல்லப்படவேண்டும். வெளிப்படையாக நகரஅபிவிருத்தித்திட்டத்தை இருசாராருடன் கலந்துபேசி செய்யவேண்டும்.

அதைவிடுத்து மூடுமந்திரமாக திட்டத்தைத் தீட்டி தன்னிச்சையாக தமிழ்மக்களின் நிலத்தை அபகரிக்க நாம் விடமாட்டோம். அது கனவிலும் நடக்காது.
ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றோம். அடிமையாக அலல்து கோழைகளாக அல்ல என்பதை கூறிவைக்கவிரும்புகின்றோம். என்றார்.