பெறப்படும் உதவிகள் சிறிதாயினும் அவற்றைப் பயன்படுத்தி எமது முயற்சிகளின் ஊடாக நாம் உயர்ந்திட வேண்டும்...


பெறப்படும் உதவிகள் சிறிதாயினும் அவற்றைப் பயன்படுத்தி எமது முயற்சிகளின் ஊடாக நாம் உயர்ந்திட வேண்டும். ஏனெனில் இந்த உலகில் மிகப் பெரிய பணம் படைத்தவர்களின் வரலாறுகளைப் பார்த்தால் அவர்கள் சிறிய முதலீடுகளுடன் அவர்களது பயணத்தைத் தொடங்கியவர்களாகவே இருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தர்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் சிறிய அளவிலான பண்ணைகளை ஊக்குவித்தல் செயற்பாட்டின் கீழ் திருகோணமலை சம்பூர் பிரதேச பண்ணையாளர்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன், கால்நடை உற்பத்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பாஃசி மற்றும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பண்ணையாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



இதன் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் நோக்கிய பல முக்கிய சவால்களில் இந்த சம்பூர் மீட்பு என்பது ஒன்றாகும். கடந்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக இதனை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எமது கட்சியும் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் ஐயா அவர்கள் மிக மிக அக்கறையோடு விடயங்களை மேற்கொண்டார். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்கின்ற அன்றைய நாளில் தான் சம்பூர் தொடர்பாக வழக்கின் தீர்ப்பு வந்தது ஒரு விசேடம். எமது மக்களின் பல கஷ்டங்களுக்கு  போராட்டங்களுக்கும் பின்னர் இந்த மண் எமது மக்களுக்கு கிடைத்துள்ளது. இதில் எமது கட்சியின் செயற்பாடுகளும் இருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.

அண்மையில் எமது அமைச்சின் கிழக்கின் எழுச்சி விவசாயக் கண்காட்சி இந்த சம்பூர் மண்ணில் இடம்பெற்றது. இதனை இங்கு செயற்படுத்தும் போது எங்களுக்கு பல கேள்விகள் எழுப்பப்பட்டன. போக்குவரத்து என்பது எமக்கு பாரிய கேள்விக் குறியாக இருந்தது. ஆனால் பல தடைகளையும் மீறி எமது கண்காட்சி சிறப்புப் பெற்றது. இவ்வாறு இந்த மக்களின் ஆதரவோடு சிறந்த கண்காட்சியை நடாத்தி முடித்தோம்.

இனைத் தொடர்ந்து எமது மீன்பிடித் திணைக்களத்தினால் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பண்ணையாளர்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வில் நிற்கின்றோம். இவற்றை மக்கள் வாழ்வாதாரமாக பயன்படுத்த வேண்டும்.

இலவசமாகக் கொடுக்கப்படுகின்ற பொருட்களுக்கான பெறுமதி மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது. ஆனால் அவ்வாறானவர்களாக எமது மக்கள் இருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.

இந்த உலகத்தில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களின் வரலாறுகளைப் பார்த்தோமனால் அவர்கள் எல்லாம் சிறிய முதலீட்டைக் கொண்டே ஆரம்பித்தவர்கள். போற்றாதார்க்கு இல்லை பொருளாட்சி என்று சொல்லுவார்கள் பொருளை ஆள வேண்டும் என்றால் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் பணத்தைப் வீணாக்காது சேமிப்பு என்பது மிக அவசியமாகும்.

எனவே இவற்றைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும். இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு கரிசனையுடன் செயற்பட வேண்டும். இதனை வெறுமனே வைத்துக் கொள்வதென்றல்லாது இதன் மூலம் வருமானம் எடுத்து எமது சமுதாயத்தினை மேம்படுத்த வேண்டும்.

நாம் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றோம் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டே அதற்கு மேல் வர விருப்பம் இல்லாதவர்கள் போல் இருக்கின்றோம். அவ்வாறு இல்லாமல் பெறப்படுகின்ற உதவிகளை அது சிறிதாக இருப்பினும் அவற்றைப் பயன்படுத்தி எம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு உயர்ந்திட வேண்டும்.

நாம் ஏழைகள், எமக்கு வறுமை என்றெல்லாம் சொல்வது சோம்பேறிகளின் கதை. அது எமது மக்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் எமது மக்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கியவர்கள். சோம்பலைத் துறந்து பல செயற்பாடுகளை மேற்கொண்ட பாரம்பரியங்களைக் கொண்டவர்கள். எனவே நாம் யாரும் ஏழைகள் என்றோ வருமைக் கோட்டின் கீழ் இருகக்கின்றோம் என்று சொல்வதைத் தவிர்த்து அதற்கு மேல் வருவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்பிக்கையோடு இருங்கள் எம்மால் ஆன எல்லா உதவிகளையும் எமது மக்களுக்காக நாம் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.